தகுதி

ரோஜாப்பூ பந்தாய் குழந்தைக் கம்பித் தொட்டிலில் கிடந்திருந்தது. பிறந்து இரண்டு மணிநேரமே ஆகியிருந்தது. ரத்தக் கவிச்சியைப் போக்க நன்றாகக் குளிப்பாட்டி எடுத்துத் திண்ணமாய் பவுடரைப் பூசிவிட்டிருந்தாள் நர்ஸ். இன்னும் கண் திறக்கவில்லை. உதடுகள் இறுக்கமாய் ஒட்டிக்கொண்டுக் கிடந்தன. தான் பிறந்திருப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி முகத்தில் அலட்சியம் தொனிக்க அசைவின்றிக் கிடந்திருந்தது. ஜீவிதத்தின் சாட்சியாய் நடுவயிறு ஏறி இறங்க,சுவாசத்தை மட்டும் நாசிகள் வழியே சுவாரஸ்யமாய் வெளியேற்றிக் கொண்டிருந்தது.

தொட்டிலின் அருகில் நின்று குழந்தையை இமைகொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் அமுதவல்லி. அவளின் அடிவயிறு “சில்’லென்றுக் குளிர்ந்திருந்தது. கல்யாணம் முடிந்து பத்து ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு குழந்தைப் பாக்கியத்திற்குக் கூட இடம் கொடுத்திராதிருந்தது அவள்வயிறு. இப்போது தன் தங்கைக்குக் குழந்தைப் பிறந்திருந்தாலும் அதைத் தான் பெற்றிருந்ததைப் போல நினைத்து சந்தோசப்பட்டாள். வறண்டப் பூமியில் மழைப் பெய்துக் குளிப்பாட்டியது போன்ற புத்துணர்ச்சி. கட்டிலில் படுத்திருந்த மலர்க்கொடியின் மீது நெகிழ்வாய் அவள் பார்வைத் தாவியது. அவளுக்கும் இன்னும் மயக்கம் தெளிந்திருக்கவில்லை. காற்றுப்போன பலூன் மாதிரி வெறுமையாகக் கிடந்திருந்தாள். முகத்தில் வேதனையின் மெல்லிய ரேகைகள்,மின்னல் வெட்டுக்களாய் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. காலிலிருந்துத் தொடங்கி கழுத்துவரைப் போர்த்தியிருந்த வெள்ளைக் கச்சை அவளை ஒரு சிலையாகக் காட்டிக் கொண்டிருந்தது. மல்லாக்கப் படுக்க வைத்திருந்தார்கள் “சிலை’யை. ஒரு குழந்தைக்குப் பிறப்புத் தந்திருந்த உணர்வில்லாமல் இறுக்கமாகக் கிடந்திருந்தது சிலை.

“அய்… தங்கச்சிப் பாப்பா”

கருணாநிதியை முந்திக்கொண்டு ஓடிவந்த அவனின் அண்ணன் பிள்ளைகள் குழந்தையைப் பார்த்ததும் கைதட்டிச் சிரித்தார்கள். டவுசரும் டீ-சர்ட்டும் அணிந்திருந்த சிறுவனும்,குட்டைப் பாவாடையும்,”தொளதொள’வென்று மேல்சட்டையும் அணிந்திருந்தச் சிறுமியுமே அண்ணனின் பிள்ளைகள். தொடர்ந்து அண்ணனும் அண்ணியும்,அப்பாவும்,அம்மாவுமாகச் சேர்ந்துப் பெருமிதத்துடன் உள்ளே வந்தனர். அவர்களைக் கண்டதும் தன் பார்வையை வெட்கப்பட்டுத் தாழ்த்தியவாறு நாசூக்காய் நகன்றுகொண்டு நின்றாள் அமுதவல்லி.

“நம்ம அம்மாவை மாதிரியே பேபி இருக்குலாடா,கருணா?”

“ஆமா… ஆமாண்ணே”

“நல்ல கவனிச்சுப் பாருங்க… அப்பாவோட முகச்சாடைத் தெரியுது”

“இல்லம்மா. உங்க முகச்சாடைதான்”

“அடிச் சக்கைன்னேனாம்… அத்தைப் “பிகு’பண்றதப் பாருங்களேன்”

தங்கள் குடும்பத்திற்குப் புது வாரிசு ஒன்று வந்த மகிழ்ச்சியில் மிகவும் சந்தோசப்பட்டார்கள் அவர்கள். அவர்களின் சந்தோசத்தில் கலந்துகொள்ள மனமில்லை அமுதவல்லிக்கு. மலர்க்கொடிக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள். அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி பார்வையை மலர்க்கொடிமேல் படரவிட்டிருந்தாள். ஆயினும் அவளின் காதுகள் அவர்கள் சிதறியிருந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ளாமலில்லை. தன் இதயத்தில் சன்னமாய் கீறல் விழுந்திருந்ததை உணர்ந்தாள். எட்டு வருடங்களுக்கு முன்னால் அநியாயமாய் மரித்துப் போயிருந்த தன் உயிருக்கு உயிரான அம்மாவின் மறுபிறப்பாகவே குழந்தையை நினைத்திருந்தாள் அவள்.

கருணாநிதியின் குடும்பத்தார் அதை வேறு விதமாய் பெருமையடித்துக் கொண்டதில் மனம் கலவரப்பட்டுப் போயிருந்தது அவளுக்கு. சிறுவயதிலே விதவையாய் ஆகியிருந்த அம்மா, எத்தனைச் சிரம்ப்பட்டு அவர்கள் இருவரையும் வளர்த்திருந்தாள். காடுகரைகளில் கூலி வேலைகள் பார்த்து அமுதவல்லியையும் மலர்க்கொடியையும் மேல்நிலைப் பள்ளி வரையிலும் படிக்க வைத்துக் கரையேற்றியிருந்தாள். அமுதவல்லியின் திருமணம் வரைக்கும்தான் அம்மாவின் உயிர் நிலைத்திருந்தது. மலர்கொடிக்கு வாழ்க்கையை அமைத்துத் தந்தது,அமுதவல்லியும் அவள் கணவனும்தான். குழந்தையில்லாது போயிருந்த அவர்களுக்குக் குழந்தையாகிப் போயிருந்தாள் மலர்க்கொடி. கல்யாணமாகி பத்து வருடங்களாகியும் தங்கள் கைகளில் ஒரு குழந்தைப் பாக்கியம் தவழந்திராதிருந்த வெறுமமையை மலர்க்கொடியைச் சீராட்டுவதன்மூலம் நிறைவுச் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். வங்கிப் பணியிலிருந்த கருணாநிதி தன் குடும்பத்தாருடன் மலர்க்கொடியைப் பெண் கேட்க வந்ததில் பெரும்மகிழ்ச்சி அவர்களுக்கு. செலவு அதிகமானதைப் பற்றிக் கவலைக் கொள்ளவில்லை. தரிசாய்க் கிடந்த சிறிய நிலத்தை விற்றும், முகம் தெரிந்தப் புண்ணியவான்களிடம் கடன்களை வாங்கியும் ஊரே பொறாமைப் படும்படி கல்யாணத்தை நடத்தி வைத்திருந்தார்கள்.

இரண்டொரு மாதங்களில் மலர்க்கொடி கரு தரித்துக் கொண்டதில் இதயம் கொள்ளாத மகிழ்ச்சி அவர்களுக்கு. மாதாமாதம் ஊரிலிருந்து வந்துப் பார்த்துவிட்டுப் போனார்கள். தானே கரு தரித்துக்கொண்டது போன்ற சந்தோசம் அமுதவல்லிக்கு. பிரவசத்துக்கு ஒரு மாதம் மீதமிருந்த நாட்களில் மலர்க்கொடிக்கு உதவியாய் வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

“என்னங்க எல்லாரும் சும்மாப் பார்த்துகிட்டு நிக்கிறிங்க? பேபிக்கு சேனைக் கொடுக்க வேண்டாமா? சீனி வச்சிருக்கீங்களா?”

“இல்லம்மா”

“வென்னீ”

“இப்போ வாங்கிட்டு வந்திர்றேம்மா”

“போங்க. மொதல்ல அதச் செய்யுங்க. எல்லாரும் இப்படிக் கூட்டம் போட்டுக்கிட்டு நின்னா பெரிய டாக்டர் வந்து எங்களைத்தான் சத்தம் போடுவாங்க.”

எல்லாரும் சலசலத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்கள். அமுதவல்லி மட்டும் ஃப்ளாஸ்க்கைத் தூக்கிக் கொண்டு துரித வேகத்தில் படிகளில் இறங்கிக் கடைத்தெருவுக்கு ஓடினாள். மருத்துமனையின் வாசலையொட்டிக் கிழக்குப் பக்கத்தில் தேனீர்க்கடை இருந்தது. சிமெண்டுத் திண்டின்மேல் பாறாங்கல் மாதிரி ஏற்றியிருந்த பாய்லரிலிருந்து அடர்ந்த மேகங்களாய் புகை மூட்டங்கள் மேலேறிக் கொண்டிருந்தன. நடைப்பாதையில் நின்றே தேனீர் வாங்கி உறிஞ்சிக் கொண்டிருந்தனர் மனிதர்கள். அந்தக் கொடும் வெயிலிலும் ஆவிப் பறக்கும் தேனீரை அவர்கள் ஆசைஆசையாய் ருசித்துக் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவள் ஆச்சிரியப்பட்டாள். தேனீர் போட்டுக் கொண்டிருந்த ஒடிசலான மனிதரிடம் ஃப்ளாஸ்க்கை நீட்டி வென்னீர் வாங்கிக் கொண்டாள். குழந்தைக்கு என்றதும் தயக்கமில்லாமல் வெந்நீர் கிடைத்ததில் அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.

சாலையின் எதிர்ப்புறம் பலசரக்குக் கடைகள் வரிசையாக நின்றிருந்தன. உதிரிகளாய் வந்த சனங்கள் கூட்டமாய் நின்று வாங்குவதும்,வாங்கியப்பின் சருகளாய் சிதறிப்போவதுமாக சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். சாலையின் அக்கரைக்குப் போவதைப் பெரும்சிரமமாக உணர்ந்தாள். சாலையைக் கிழித்துக்கொண்டு வாகனங்கள் அதிக வேகத்தில் பறந்துப்போயின.

கணப்பொழுதில் கிடைத்த அவகாசத்தில் சாலையின் மறுகரையை அடைவதற்குள் அவள் உயிர் போய்விட்டுத் திரும்பி வந்தது போலிருந்தது. கொஞ்சம்தான் முந்தியிருந்தாள். ஒருநொடி தாமதித்திருந்தால்கூட எமகாதகனாய் உறுமிக்கொண்டு வந்த ஒரு டேங்கர் லாரிக்குள் அகப்பட்டுக் கூழாகச் சிதைந்திருப்பாள்.

அவள் இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையில் பணம் இருந்தது. கசங்கியப் பத்து ரூபாய் தாளைக் கவனமாய் உருவியெடுத்து கடைக்காரரிடம் தந்தாள். நூறு மில்லிச் சீனியைத் தாள் பொட்டலத்தில் போட்டுத் தந்தார் கடைக்காரர். பொட்டலத்தை வாங்கி,கைப்பிடிக்குள் பதுக்கிக் கொண்டாள். மீதமாய் கிடைத்த சில்லரைக் காசுகள் சுருக்குப் பைக்குள் சரிந்தன. மீண்டும் பதற்றத்துடன்தான் எதிர்ப்புறத்தைக் கடக்க வேண்டியிருந்தது. மருத்துவமனையின் வாசலை மிதிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.

தொழிற்சாலைகள் மிகுந்த அந்த நகரத்தில் பிரசித்திப் பெற்றிருந்த மருத்துவமனை அது. மூன்று அடுக்குகளில் அதன் பிரமாண்டத்தை,உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. சகலவித நோய்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கும் மருத்துவர்களையும், கருவிகளையும் தன்னகத்தே வைத்திருந்தது. நகரில் பசையுள்ளப் பணக்காரர்களும், பணியாளர்களும், அந்த மருத்துவமனையையே நாடினார்கள். காசு செலவழித்தாலும் பரவாயில்லை, சீக்கிரமாய் நிவாரணம் தருவேன் என்ற நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருந்தது அது.

மலர்க்கொடிக்குத் தலைப்பிரவசம் என்பதால் மிகவும் அக்கறையுடன் அந்த மருத்துவமனையில் கொண்டுவந்துச் சேர்ந்திருந்தான் கருணாநிதி. வங்கியில் காசாளர் பணி,அவனுக்குக் கைநிறையச் சம்பளம் தந்தது. அவனின் அப்பாவும் அனல்மின் நிலையத்தில் தலைமை எழுத்தராய் பணிசெய்து ஓய்வுப் பெற்றிருந்தார். அண்ணன் உப்பளங்களை வைத்து நடத்திக் கொண்டிருந்தான். வறுமையை அனுபவித்ததிராத நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த குடும்பம். அமுதவல்லியின் குடும்பத்தைப் போல அரக்கப்பரக்கப் பாடுபட்டு,வயிற்றைக் கழுவி,வாழ்க்கைக்குச் சேமித்துவைக்கும் எளிய குடும்பம் அல்ல. மலர்க்கொடி அழகாய் இருந்ததும்,அமுதவல்லியிடம் கொஞ்சம் பணம் இருந்ததுமே கருணாநிதியிடம் கைப்பிடித்துக் கொடுக்க தோதுவாகப் போயிருந்தன.

அவர்களின் மேட்டுக்குடி வாசம் அமுதவல்லியின் கிராமத்துக் காற்றை அலட்சியப் படுத்தியே ஒதுக்கியது. மனிதர்களில் சேர்க்கையில்லை என்கிறப் பாவனையில் அமுதவல்லியையும், அவளின் கணவனையும் பரிசாக இழையில் தொங்கிக்கொள்ள வைத்தது. அமுதவல்லியும் அவர்களிடம் பெரிதாக ஒட்டிக் கொள்வதில்லை. அவர்களைக் காணும் தருணங்களில் வெறுமையுடன் புன்னகைத்துக் கொள்வாள். வார்த்தைகளை விரயமாக்கிக் கொண்டதில்லை. விசாரிப்புக்கு உட்படும் நேரங்களில் மட்டும்,”ஆமா இல்லை’ என்ற அளவானப் பதில்களுடன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டாள், தன் வயிற்றில் இன்னும் ஒரு புழு பூச்சிகூடப் பற்றிக் கொள்ளாதிருந்தால்தான் தன்னை அவர்கள் அருவருத்து ஒதுக்குகிறார்களோ என்று வேதனையாக நினைத்துக்கொள்ளத் தோன்றியது அவளுக்கு. அதை நிரூப்பிப்பது போலவே சில சமயங்களில் கருணாநிதியின் அம்மாவும் அண்ணியும் அமுதவல்லியின் காதுபடவே கேலிப்பண்ணிச் சிரிருத்திருந்தார்கள். “குழந்தைப் பாக்கியம் இல்லாதவள் எப்படி ஒரு பிள்ளைத் தாய்ச்சிக்கு ஒத்தாசைப் பண்ணப் போகிறாள்?’ என்று வக்கணையாய் வாயடிதிருந்தார்கள்.

அமுதவல்லிக்குத் தன் தங்கையின் சுகமே பிரதானமாகப்பட்டது. பிரவசம் என்பது மறுபிறவி மாதிரி என்று என்று எப்போதோ அவர்களின் அம்மா பேச்சுவாக்கில் சொல்லியிருக்கிறாள். அமுதவல்லியால் மலர்க்கொடியைத் தனியே தவிக்க விட்டுவிட்டு இருந்துவிட முடியாதிருந்தது. கருணாநிதியின் குடும்பத்தார் எல்லோரும் ஒரே வீட்டில் முடங்கிக் கிடந்ததால் அவர்கள் பாய்ச்சியக் கணைகளின் வலிகளைத் தவிர்க்க முடியாமல் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. கருணாநிதி மட்டும் அவர்களிடமிருந்து கொஞ்சம் விதிவிலக்காய் தெரிந்தான் அமுதவல்லிக்கு. அவன் அவளிடம் அணுசரனையாய் நடந்து கொண்டதில் சற்று ஆறுதல் கொண்டிருந்தாள். அவனும் அவளின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகளைச் சில நேரங்களில் சிறந்த ஆலோசனைகளாக ஏற்றுக் கொண்டிருந்தான்.

அறைக்கு வெளியே எல்லோரும் கலகலப்பாய் பேசிக்கொண்டு நின்றிருந்தினர். வராந்தாவின் சந்தடியில் அவர்களின் குரல்களே தனி முழக்கங்களாய் கேட்டுக் கொண்டிருந்தன. சிறுவர்கள் இருவருக்கும் விளையாட்டுக் களமாய் போயிருந்தது வராந்தா.

வேர்க்க விறுவிறுக்க அமுதவல்லி வந்துக் கொண்டிருந்தாள்.

“என்ன வென்னியும் சீனியும் வாங்கியாச்சா?” பரிகாசம் இழையோடக் கேட்டாள் கருணாநிதியின் அம்மா. சதைக் கோளமாய் தொங்கிய அவள் முகப்பரப்பில் மிதப்பின் சாயல் மின்னியது.

“ஆமாஙக” ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக்கொண்டே விசைக்கூட்டிய எந்திரமாய் அறையை நோக்கி வேகமாய் நடைப்போட்டாள் அமுதவல்லி.

மலர்க்கொடி விழித்திருந்தாள். இமைகளை முழுவதும் விரித்துத் திறந்துகொள்ள முடியாத கிறக்கத்தில் மேம்போக்காகப் பார்த்தாள். அவளின் தலைமாட்டில் முகமலர்ச்சியுடன் அமர்ந்திருந்த கருணாநிதி அமுதவல்லியைக் கண்டதும் நாகரிகம் கருதி அவசரமாய் எழுந்து நின்றான்.

“வாங்கிட்டு வந்திட்டிங்களா அண்ணி?”

“ஆமாங்க.”

மலர்க்கொடியின் பார்வை இப்போது அமுதவல்லியின் கண்களைச் சந்தித்தது. கருணையும் பாசமும் ததும்பியக் கண்கள். ஓட்டமாய் வந்திருந்ததில் அவள் முகத்தில் வேர்வையின் ஊற்றுக்கள் பொங்கி வழிந்தபடி இருந்தன. சதா நேரமும் மலர்க்கொடியின் நன்மைக்காக ஓய்வு ஓழிச்சலில்லாமல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அக்கறையின் முழுவடிவம்.

வறட்சியில் ஒட்டியிருந்த தன் உதடுகளைச் சிரமப்பட்டுத் திறந்தாள் மலர்க்கொடி. “என்னக்கா?”

“கொழந்தைக்குச் சேனக் குடுக்கணுமில்லாம்மா? அதான் வென்னியும் சீனியும் வாங்கிட்டு வந்திருக்கேன்.”

குழந்தை இன்னும் விழித்திருக்கவில்லை. தரையில் வரைந்த ஓவியமாய் அசைவின்றியே கிடந்திருந்தது. அதன் உதடுகள் மட்டும் ஈரத்துக்காக தவித்ததுபோல மேலும்கீழும் காற்றைப் பிசைந்தன.

அமுதவல்லி சன்னமாய் அதிர்ந்து போனாள். “குழந்தைக்குப் பசிக்குதுப் போலம்மா. சீக்கிரம் சீனிய கலக்கிக் குடுக்கணும். நர்ûஸக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”

அவளை அலைய வைக்கவில்லை நர்ஸ். பணியின் நிமித்தம் தற்செயலாக உள்ளே கொண்டிருந்தாள்.

“வாங்கிட்டு வந்தாச்சா? தம்ளர்லக் கொஞ்சமா வென்னீர் எடுத்து அதுக்குள்ள சீனிப்போட்டுக் கலக்குங்க.”

மேசைமேல் தனித்திருந்த தம்ளரைக் கையிலெடுத்தாள் அமுதவல்லி. அதை வென்னீர் விட்டுக் கழுவி வாஷ்பேஷினில் நீரைக் கொட்டினாள். மீண்டும் சிறிதளவு வென்னீரால் தம்ளரின் கால் பகுதியை நிறைத்தாள். பொட்டலத்தை அவிழ்த்து,சொற்ப அளவில் சீனியை அள்ளியெடுத்து வென்னீருக்குள் போட்டாள். கொஞ்சநேரம் தம்ளரைக் குலுக்கிவிட்டுப் பார்த்தபோது வென்னீருக்குள் சீனி முழுவதுமாய் தன் உருவத்தை இழந்திருந்தது தெரிந்தது.

பாந்தமாய் குழந்தையைத் தூக்கி மடியில் சாய்த்துக் கொண்டு ஸ்டூலில் அமர்ந்தாள் நர்ஸ். குழந்தை இப்போது நெளிந்து கொடுத்தது. பலநாள் உழைப்பின் அசதியைப் போக்கும் பாவனையில் மிகவும் சிரமப்பட்டு உடலை அசைத்தது. அதன் உதடுகளிலிருந்து சன்னமாய் அழுகுரல் வெளிப்படத் துவங்கிற்று.

“வாங்க உறவுக்காரங்கதான் சேனக் கொடுக்கணும்.”

“கொஞ்சம் பொறுங்க சிஸ்டர். வராந்தாவுல கொழந்தையோடப் பாட்டி நிக்கிறாங்க. கூட்டிக்கிட்டு வந்திர்றேன்.”அமுதவல்லி வெளியே போக முற்பட்டாள்.

மலர்க்கொடி அவசரமாய் அவளைத் தடுத்தாள். “சேனையை நீ குடுத்தா என்னக்கா? குழந்தையை நா பெத்து எடுக்கறதுக்கு நீதான கஷ்டப்பட்ட?”

கருணாநிதியும் தன் மனைவிக்கு ஒத்துவாசிக்கத் தொடங்கினான்.

“ஆமா அண்ணி. நீங்க குடுத்தா என்ன? உங்களுக்கு அந்தத் தகுதி இல்லையா என்ன?”

அமுதவல்லிக்கு ஆற்றாமையாய் இருந்தது. மனம் பேதலிப்பில் திணறியது. “அப்படிச் சொல்லாதிங்க. உங்க அம்மாவுக்குத்தான் எல்லாத் தகுதியும் இருக்கு. புள்ளக்குட்டிங்கப் பெத்தெடுத்து பேரன் பேத்திகளக் கண்டவங்க. என் தங்கச்சி மகளும் அவுங்கள மாதிரி குடும்பம், குழந்தையின்னு ஆகறதுதான் எனக்குச் சந்தோசம்.”

விறுவிறுவென்று வாசலை நோக்கி ஓடினாள் அமுதவல்லி. அவர்கள் நின்றிருந்த இடத்தில் வெறுமை நிறைந்திருந்தது. வராந்தாவின் அற்றம்வரைப் போய் தேடினாள். ஏமாற்றமே மிஞ்சியது.

எழுதியவர் : வாணிஸ்ரீ சிவகுமார் (21-Feb-16, 10:12 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : thaguthi
பார்வை : 289

மேலே