சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் தவறான தகவல்கள் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் - போலீஸார் கடும் எச்சரிக்கை

போலீஸார் எச்சரித்துள்ளனர்.

பழநி - உடுமலை சாலையில் சண்முகநதி பாலம் அருகே கடந்த 17-ம் தேதி பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் பைக்கில் வந்த 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்த நேரத்தில், பழநியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு காரில் வந்துகொண்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விபத்தைப் பார்த்ததும் காரில் இருந்து இறங்கி, பலி யானவர்களின் உடல்களைப் பார்த்து கண்ணீர்விட்டார்.

இந்த காட்சியை அங்கிருந்த யாரோ படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் போட்டுள்ளனர். அதை வைத்து, ‘வைகோவின் கார் மோதி 2 பேர் பலியாகிவிட்டனர்’ என்று கடந்த 3 நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வைகோ, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதேபோல சில மாதங்களுக்கு முன்பு, பெண் போலீஸ் ஒருவருடன் காவல் உதவி ஆணையர் செல் போனில் பேசும் உரையாடல் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் உதவி ஆணையரின் படம் வெளியே வந்துவிட்டது. ஆனால், அவருடன் பேசிய பெண் போலீஸின் படம் வெளிவரவில்லை. இதை சாதக மாக பயன்படுத்திக்கொண்ட சிலர், தங்களுக்கு வேண்டாத பெண் களின் படங்களை போட்டு, ‘இதுதான் அந்த பெண் போலீஸ்’ என்று சமூக வலைதளங்களில் பரப்பினர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்ப பெண்ணின் புகைப்படம், பிரபல கொள்ளைக் காரி என்ற தலைப்பில் சென்னை யில் வெளிவந்து பரபரப்பை ஏற் படுத்தியது. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் அந்தப் பெண் புகார் கொடுக்க, அதன்பிறகே உண்மை வெளிவந்தது.

இப்படி பல விஷயங்களில் சம்பந்தமில்லாதவர்களின் படங்கள் தவறான முறையில் சமூக வலை தளங்கள் மூலம் பரப்பப்படுகின்றன. நல்ல தகவல்களை விட, தவறான தகவல்களே சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவுகின்றன. இதனால், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘வாட்ஸ்-அப்’ வந்தபிறகுதான் இதுபோன்ற தகவல்கள் வேகமாக பரவுகின்றன

செல்போன்களில் எளிதில் பயன்படுத்தும் வகையில் இது இருப்பதால், தங்களுக்கு வரும் தகவல் உண்மையா என்றுகூட ஆராய்ந்து பார்க்காமல் உடனே மற்றவர்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். இதை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தவறான தகவல்கள் பரவுவதற்கு இதுவே முதல் காரணமாக இருக்கிறது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69-வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 7 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கும். பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி தவறு செய்தால் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலாக தண்டனை கிடைக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின்கீழ், குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும்’’ என்றார்.

‘பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பினால் அவர்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து விடுவோம். வாட்ஸ்-அப் மூலம் பரப்புபவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமே தவிர, நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம்’’ என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எழுதியவர் : (23-Feb-16, 5:15 am)
பார்வை : 64

மேலே