அச்சம் என்பது மடமை -கார்த்திகா

இன்றைய பொழுதின்
தீர்மானத்தில்
வெற்றியை விட்டு
தோற்பதற்கான வாய்ப்புகளை
எதிர்க்க ஓடிக் கொண்டிருக்கிறது
பகல் தொலைத்த
இரவொன்று!
மின்மினிகள்
காதல் செய்யும் நேரத்தில்
விட்டில்களுக்கு எச்சரிக்கை
வெளிச்சம் கொஞ்சம்
அபாயகரமானது தான்
மயங்கி வீழாத வரை ..
அந்த இரவுப் பூக்களை
விசாரணைக்கு அழைக்க வேண்டும்
அச்சமின்மைக்கு அருஞ்சொற்பொருள்
தெரிய வைத்தல் அவசியமே
நிலவும் நட்சத்திரக் குவியல்களும்
மேலிருப்பதால் ஆபத்தில்லை
எரிந்து வீழ்தல் யாருக்கு லாபம்
கொஞ்சம் கொஞ்சமாய்
தீர்ந்து போன இரவில்
மீந்து நின்ற
தனித்த ஒற்றை நிலவுடன்
துணைக்கு ஒரு விடிவெள்ளி
பூத்துக் கிடக்கிறது
அதிகாலைத் தோட்டத்தில்!