தமிழுக்கும் சமயங்களுக்கும் ஊடான தொடர்பு - நா கார்த்திகேயன்

சமயங்கள் தமிழை வளர்த்தனவா, இல்லை தமிழால் சமயங்கள் வளர்ந்தனவா என்கிற தலைப்பு விவாதத்துக்குறியது
-
தமிழுக்கும் சமயங்களுக்கும் ஊடான தொடர்பினை விளக்கும் ஒரு பழம்பாடல் ஒன்று உண்டு....
-
”நாயன்மார் நாவமுதும் நம்மாழ்வார் பாசுரமும்
மேயப்புகழ் மேகலையும் மேம்பாடு சிந்தாமணியும்
மாமுனி தேம்பாவணியும் மான்புறு சீறாவும்”
-
நமது கல்வித் திட்டத்தில் தமிழ் இலக்கியம் குறித்தான பங்களிப்பில் இந்து மதம் சார்ந்த இலக்கியங்களே பெரும்பான்மையாக சேர்க்கப்பட்டது .கிருஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களின் படைப்புகள் பெயரளவிற்கே பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டிருக்கின்றன என்பது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு.
-
தமிழகத்திற்கும் இஸ்லாமிய உலகத்திற்குமான தொடர்புகளின் துவக்கமென பார்த்தால் பண்டைய காலத்திலான வர்த்தக தொடர்புகள் ஆதாரமாய் சொல்லலாம்.எனினும் தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்தது பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பதினாறாம் நூற்றாண்டின் துவக்கமென சொல்லலாம்.
-
தமிழ் இலக்கியத்தில் மரபு சார்ந்த பிரபந்த வகைகள் தொண்ணூற்று ஆறு இருப்பதாக தெரிகிறது.இஸ்லாமிய தமிழறிஞர்கள் அநேகமாய் தமிழின் எல்லா எல்கைகளிலும் சென்று எழுதியிருக்கிறார்கள்.
-
இதனையும் தாண்டி இஸ்லாமிய தமிழறிஞர்கள் தமிழுக்கு புதிதாக எட்டு இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர் என்பது பலரும் அறியாத ஒன்று. இவை முறையே....
-
-
மஸலா
கிஸ்ஸா
நாமா
முனாஜாத்து
படைப்போர்
நொண்டி நாடகம்
திருமண வாழ்த்து
அரபுத் தமிழ்
-
-
பதிவின் நீளம் கருதி எல்லா வகையினையும் தொட்டுத் தொடராது முதல் வகையான மஸலா வகையினை மட்டும் இந்த பதிவில் பார்ப்போம்....
மஸலா என்பது அரபி வார்த்தையான மஸ் அலா என்கிற வார்த்தையின் மருவல் எனலாம். தொடர்புடைய தமிழ் அர்த்தமாய் தேடுதலும் தெளிதலுமெனலாம். கேள்வி கேட்டு அதன் மூலமாய் இஸ்லாமிய தத்துவங்களை விளக்குவதே இந்த வகை இலக்கியம்.
இந்த மஸலா வகையில் தமிழில் மூன்று நூல்கள் இருக்கின்றன.
-
-
1.ஆயிர மஸலாவென்று வழங்கும் அதிஜய புராணம்
2..நூறு மசலா
3. வெள்ளாட்டி மசலா
-
-
இவற்றுள் ஆயிர மஸலாவே காலத்தால் முந்தையது என தெரிகிறது. இதை இயற்றியவரின் பெயர் வண்ண பரிமள புலவர் என அறியப்படும் செய்கு முதலி இஸ்ஹாக்.1572 ம் ஆண்டு இந்த நூலை மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றியிருக்கிறார் என்பதும் வியப்பான ஒரு செய்தி. இந்த நூலில் 1095 பாடல்கள் உள்ளன.
-
-
வெள்ளாட்டி மஸலா என்கிற நூல் காலத்தால் பிந்தையது. 1852 ம் ஆண்டில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஷெய்கப்துல் காதிறு லெப்பை என்பாரால் இயற்றப் பட்டது .வசன நடையில் உள்ள ஒரே மஸலா இதுவேயாகும். தமிழில் உள்ள மூன்று மஸலாக்களில் இதுவே சிறந்ததாய் கருதப் படுகிறது.
-
-
மூன்றாவது மஸலாவான நூறு மஸலாவினை எழுதியவர் பெயரோ அல்லது வெளியான காலக்குறிப்புகளோ கிடைக்கவில்லை. எனினிம் இந்த நூல் 1872ம் ஆண்டில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது என்கிற தகவல் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது.
-
மற்ற மஸலாக்களை விட இந்த நூறு மஸலாவே அதிகமாய் பதிப்பிக்கப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பினை உணர்த்தும்.
பதிவின் நீளம் கருதி இந்த அளவில் நிறைவு செய்தாலும் மற்ற வகைகளைப் பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
-
படித்ததை பகிர்கின்றேன்-
======நன்றி; முகநூல் - தமிழ்ப் பணி மன்றம் - நா. கார்த்திகேயன்‎
பகிந்ததை நான் பகிர்கிறேன்

எழுதியவர் : நா. கார்த்திகேயன்‎ (26-Feb-16, 9:46 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 316

சிறந்த கட்டுரைகள்

மேலே