ஒரு திருநங்கை தேவதைக்காக
எல்லாரிலிருந்தும்
உன்னை விலகி நிற்கச் செய்த
அதே குரோமோசோம் குளறுபடிதான்
என்னை தவிடுபடியாக்கியதும்!
நூற்றாண்டுகளுக்கு முன்
பெண்ணாக இருந்த தேவதைகளில் சிலர்
இப்போது திருநங்கைகளாக மாறியிருக்கிறார்கள் என்பது மட்டும்
சர்வ நிச்சயமாக தெரிகிறது!
உன்னைப் பாவமாக பார்க்கிறவர்களின் மீது
நீ வீசும் கோபப் பார்வைகளின் வீரியம்
ஐந்தாம் தலைமுறை அணு உலைகளை விட அதீதமானது!
நாளை ஒரு ஆதரவற்ற குழந்தையின்
ஆதார சுருதியாக நாம் மாறும்போது
உன்னால் தந்தையுமானவளாக இருத்தல் எளிது!
உன் கருப்புக் கரங்களில்
கவிபாடும் வண்ண வளையல்கள்
என் மீது வானவில்லை போர்த்தி
போர் தொடுக்கிறது!
யாசித்தலை உன்பாலின்
குலத் தொழிலாய் சித்தரித்த ஒருவனிடம்,
ஆண்களிலும் பிச்சைக்காரர்கள் உண்டு
பெண்களிலும் பிச்சைக்காரர்கள் உண்டு
எங்களிலும் பிச்சைக்காரர்கள் உண்டு
ஆக யாசித்தல் பூமாதேவியின் குலத்தொழில் என்றாய் நீ
அக்கணமே உன்னிடம் காதல் பிச்சை எடுக்கத் துவங்கிவிட்டேன் நான்!