வேறு நிலாக்கள்-26 புலமி

மயான வாசம்....!

ஒரு மௌனச் சோலைக்குள்
தற்காலிகமாய் நடைபயணம்
கைகள் நிறைய
திணிக்கப்படும் மௌனப்பூக்களோடு
வீடுதிரும்பினேன் ...

இன்னமும் வாட்டமில்லாத
அப்பூக்களை
வாசற்படிக்கு வெளியே
அலங்கரித்துவிட்டு நுழைகின்றேன்
எனக்கான வரவேற்ப்பில் முகம்சுளிப்பு !

குறுக்கு விசாரணைகளும்
குறுகிய விளக்கங்களும்
ஒன்றுக்கொன்று சமாதானமாகின்றன
அன்றைக்கு எனக்கான உணவில்
உப்புமில்லை காரமுமில்லை ...

அந்நியமாகத்
தெரிகின்றேன் அனைவருக்கும்
ஒட்டாத உறவாகவே
அனைத்தும் என்னை வெறுப்பதாய்
சலனத்தை ஒட்டிக்கொள்கிறேன் ...

பால்கனி விளிம்புகளில்
கரம்கேட்டுத் தொங்குகின்றது
முகமலர்ச்சி
காப்பாற்ற ஓடுகின்றேன்
இடைமறித்தது தேநீர் !

தொலைக்காட்சிக்கு முன்
மண்டியிட்டன
வெறுப்புகள் அனைத்தும்
அங்கோ மரண அறிவிப்பு
சுடுகாட்டு வாசம் மீண்டும் ...

கதவைத் திறந்தேன்
அங்கே
மரணித்த மலர்களின் வாசங்களை
நுகர்ந்து கொண்டிருந்தது காற்று
இவைகளை எங்கே புதைப்பது ?!

இரவு முழுவதும்
எதையோ தேடிக்கொண்டிருக்கும்
மன ஓட்டங்களுக்கு நடுவே
மரணப் பாலம் - இரு முனைகளாக
காலையும் மாலையும் !

எழுதியவர் : புலமி (1-Mar-16, 9:00 pm)
பார்வை : 139

மேலே