இதயம் பேசுகிறது
அப்படி எதுவும் தவறு
செய்யவில்லை
அவள்
அனாதையாய்
பிறந்ததைத் தவிர..!
பெற்றவள் குப்பைத் தொட்டியிலிட்ட நொடியில் நினைத்திருக்கவில்லை
பெண்ணாய் பிறந்தது
குற்றமென..!
பிச்சைக்காரியின் பிள்ளையான போது
புரியவில்லை பூவைக்கு
பூப்பெய்தலும்
கொடுமை என்று..!
யாசிக்கும் கரங்களை
நெருடிய விரல்களின்
ஐந்து ரூபாய்
ஆபத்து என்றும் அறிந்திருக்க வில்லை
அபலை..!
இதோ எவனோ
மேய்ந்து முடிந்த அவள் தேகம் ஈக்கள் மொய்க்க தயாராகிக்கொண்டிருக்கின்றது.
அவளின் இதழ்கள்
இனி பேசபோவதில்லை
இதுவரை
அவளுக்காக துடித்துக்கொண்டிருந்த
நானே இறுதியாய் பேசிவிட்டேன்...!
இறுதித் துடிப்போடு
"இதயம்"...!!!