ஏமாளிகளா, கோமாளிகளா

முட்டாள் ஏமாறுவான்,
ஏமாற்ற மாட்டான்.
ஏமாறுபவன் இருக்கும் வரை
ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்.

கோஹினூர் வைரம் காணாமல் போனதும்
கஜினி 17 முறை படையெடுத்து வந்து திருடி சென்றதும்
கனிம சுரங்க கொள்ளை மணற்கொள்ளை என்றெல்லாம்
வரலாற்றில் ஏமாந்தது இன்றும் அறிவோம், அவ்வளவே!

போபர்ஸ், ஹர்ஷத் மேத்தா, கேல்கர், ஜெயின் டைரி, 2ஜி
சட்டத்தின் செயல்பாடுகளின் கோளாறுகள்;
ஜனநாயக நாட்டின் வெவ்வேறு காலகட்டத்தின்
விஷமச்செயல்கள் - சிலர் தண்டிக்கப்பட பலர் தப்பித்து விட

யார் யாரை ஏமாற்றியது?
அரசியல்வாதிகள், மக்களை;
யார் யாரை ஏமாற்ற கூடாது?
அதிகாரிகள், மக்களை;

யார் யாரிடம் ஏமாறலாம்?
கலாரசிகர்கள், கலைஞர்களிடம்;
யார் யாரை ஏமாற்றலாம்?
தொண்டன் தலைவனை, தலைவன் தொண்டனை;

சட்டங்கள் போதாது; சாதகமான சூழ்நிலைகள்
சிலர் மட்டும் அறிந்திருக்க
அதன் வழியினில் குற்றங்கள் தொடர
ஏற்பட்டதொரு சமூகத்தை
சரி செய்ய இயலாத முட்டாள்கள்
ஏமாந்த காலம் கடந்த காலம்;

எப்படி ஏமாந்தோம் என்று
ஏமாந்தவர்கள் எல்லோரும்
ஒன்று கூடி கைகொட்டி சிரிக்க
காட்சிகள் அரங்கேறுகின்றன
தினம் தினம் தொலைகாட்சிகளில்,
வாக்குமூலங்கள் தூவப்படும் நேரம்
மக்கள் கண் அசரும் நேரம்.

ஒரு அரசியல்வாதி ஊழல் செய்ததால்
ஒரு கட்சி தண்டிக்கப்பட்டால்
அது சமூக நீதியாகுமா?
அப்படி நடந்தால்
ஏதோவொருவகையில்
எல்லோரும் தண்டிக்கப்படுவார்களே?

சரி தான், தீர்வு என்ன?

சட்டம் தன் கடமையை செய்யாமல்
நீதி தேவதை கண் மூடி தூங்குவது
இனியும் ஏற்புடையதல்லவே!
கண் கூட தெரிகிறதே
சட்டத்தின் ஆமை வேகமும்
சட்டவல்லுனர்களின் மல்லுக்கட்டும்!

உடனடி தீர்வு உள்ளபடியே
உணர்ந்து செயலாற்ற வேண்டியது
பறிமுதல் நடவடிக்கைகளே.!

சுதந்திரத்திற்கு முன்
பொருந்தாத சட்டங்கள்
எரிக்கப்பட்டன;
ஒதுக்கப்பட்டன;
மாற்றப்பட்டன.
சரித்திரம் மீண்டும் திரும்ப வேண்டிய
சாத்திய கூறுகள் இன்று ஏராளம்.

ஆனால்,
பழைய குருடி, கதவை திறடி என்று
பஞ்சாங்கம் பேசி பரிகாசமாடி
பாதை மாறும் போதை மாந்தர் தான்
இங்கு வெகுவாய் எல்லோரும்..!

வங்கி கடன் தொல்லையால்
வட்டிக்காரன் தொல்லையால்
வாழ்வை முடித்துக்கொண்ட
சாமானிய கோழைகள்
தரித்திர முட்டாள்களா?

7800 கோடிகளை ஸ்வாகா
செய்துவிட்டு 4 ஆண்டுகள்
வங்கிகளிடம் வாய் சவடால்
விட்டு வரும் மல்லையாவுக்கு
ஆப்பு தான் இன்றைய செய்தி.

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்,
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்!
முட்டாளை முட்டாளாகவே வைத்திருக்கும்
இந்த அரசியல் புத்திசாலிகள்
கையில் இலவசங்களை
வாங்கிக்கொண்டு சிரிப்பவர்கள்
இன்றைய கோமாளிகளா? நாளைய ஏமாளிகளா?

நீங்களே சொல்லுங்கள்..!

எழுதியவர் : செல்வமணி (8-Mar-16, 10:11 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 163

மேலே