அவள்தான் பைத்தியம்-சுஜய் ரகு
சாலையில் கிடந்த கிழிந்த சேலையொன்று தான்
அவளது மானம் காத்திருந்தது
யாரோ பாசத்திலோ கேளிக்கோ போட்டுவிட்ட
பாசிமணி மாலைகூட சாலையில் கிடந்த ஒன்றுதான்
ஊன்றி நடக்கும் குச்சியும் அத்தெரு வாய்க்கமேட்டுக்
கிழவியுடையது ஊர் மயானத்திலிருந்து
நேற்றைக்கு முதல் நாள் எடுத்து வந்திருந்தாள்
இப்படியாக நீள்கிறது தலை பிய்த்தபடி திரியும்
அவளுக்கும் அந்த சாலைக்குமான உறவு
பின்னொரு நாளிலும் வானம் வாய் கொப்பளித்துத் துப்பிய
சிறு மழையொன்றின் பெருங்காற்றில் அச்சாலையில்
அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியைப் பார்த்து
கத்திக் கூச்சலிட்டபோது தீர்க்கமாய்த் தானிருந்தாள்
இப்போதும் அவள்தான் பைத்தியம் அத்தெருவில்...!