தலைக்குக் கவசம் தலைக் கவசம்

படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெரும்பாலானோர் தலைக் கவசம் அணிவதில்லை. இருசக்கர வாகனங்கள் ஓட்டும் அனைவருமே கண்டிப்பாக தலைக் கவசம் அணிய வேண்டும். வேண்டாம் என்போர் ஆயிரம் காரணங்கள் சொல்வர். அறிவுடையோர் ஒவ்வொருவரும் தலைக் கவசத்தின் அவசியத்தை உணர்ந்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தலைக் கவசம் வேண்டாம் என்பதற்கு அவரவர் பல காரணங்களை சொல்கின்றனர். தலைமுடி கலைகிறது. தலையில் வேர்க்கிறது, பின்வரும் வாகனங்களின் ஒலி கேட்கவில்லை, தலை கழுத்து வலிக்கிறது என பல நொண்டிச் சாக்கு காரணங்கள்.

தினம் தினம் நடக்கும் சாலை விபத்துக்களில் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்த உறவினர், நண்பர்களின் சொந்தங்களே தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்வதில்லை, தலைவிதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மீண்டும் தலைக்கவசம் இல்லாமல்தான் வாகனங்கள் ஓட்டுகின்றனர்.

நான் ஓரமாகத்தான் ஓட்டுகிறேன், நிதானமாகத்தான் ஓட்டுகிறேன், மெதுவாகத்தான் ஓட்டுகிறேன் என்றெல்லாம் சொல்லலாம். செல்லும் வழியில் உள்ள சாலைகள், மற்ற ஓட்டுனர்கள், மேடு பள்ளங்கள், வேகத்தடுப்புகள் அனைத்தும் நல்லபடியாக இருக்கவேண்டுமே!

சிறு கல் தடுக்கிவிடலாம், ஆடு, மாடு, நாய்கள் குறுக்கே வரலாம். திடீர் திருப்பங்கள், சாலையில் எண்ணெய் கசிவுகள், மணல் திட்டு்கள் ஆகியன சறுக்கிவிடலாம். விபத்துகள் நாம் எதிர்பார்த்து வருவதல்ல. எனவே, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்ட எந்த விதமான காரணங்களோ, சால்ஜாப்புகளோ சொல்லக் கூடாது.

தலையின் மேல் உள்ள தோல் (Scalp) மிக மிருதுவாக இருக்கும். தலையைக் காக்கும் மண்டை ஓடும் அவ்வளவு கடினமாக இரும்பால் செய்யப்பட்டதல்ல. எதிர்பாராமல் கீழே விழும்பொழுது மண்டையோட்டின் ஒரு புள்ளியில் (point) அடிபட்டாலும் கூட சிதறு தேங்காய் போல மண்டையோடு உடைவதுடன், அத்துடன் இணைந்த ரத்த குழாய்களும் தாறுமாறாக கிழிந்து, மூளைப்பகுதிக்குள் ரத்தக்கட்டு பெருகி மூளை செயல்பாட்டை இழந்துவிடும். மூளைச் சாவு ஏற்பட மிகுந்த வாய்ப்புண்டு.

சென்னை பொது மருத்துவமனையில் 1983 ல் மூளைக் கட்டிக்கான அறுவை சிகிச்சைக்காக என் தம்பி அனுமதிக்கப்பட்டிருந்த நேரம். மூளை அறுவை சிகிச்சைப் பிரிவில் விபத்தில் தலைகாயம் ஏற்பட்டு தினமும் 10 பேர்களாவது கொண்டு வரப்படுவார்கள். உடனே தலை ஸ்கேன் எடுத்து மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவிற்கு, அறுவை சிகிட்சைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். ஒரு சிலரே பிழைக்க வாய்ப்புண்டு. பெரும்பாலும் பிழைப்பதில்லை. பார்க்க மிகப் பரிதாபமாக இருக்கும்.

என்னுடன் அரசு கண் மருத்துவத் துறையில் பணிபுரிந்த ஒருவர் மதுரை கோரிப்பாளையத்திலும், திருச்சி புத்தூரில் மெதுவாகக் சென்று கொண்டிருந்த என் உறவினர் ஒருவர் பேருந்து இடித்து கீழே விழுந்து தலைக்காயத்தினால் உயிரிழந்தனர். உயிரிழந்தால் கூடப் பரவாயில்லை. பிழைத்தாலும் சில நேரங்களில் கைகால்கள் விளங்காமல் போகலாம். பேச்சு சரியாக வராமலும், காது கேட்காமல், கண்கள் தெரியாமல் போகலாம்.

விபத்து நமக்கு ஏற்படாது, நான் சாக்கிரதையாகத்தான் ஓட்டுகிறேன் என்று அசட்டுத் தைரியம் கூடாது. நம் எதிரிலோ, பின்னாலோ ஓட்டுபவர்களும் அவ்வளவு எச்சரிக்கையாக வருவார்கள் என்பது நிச்சயமல்ல. இன்று வாகனம் ஓட்டும் நிறையப் பேர், மாணவர்களும் சரி, அலுவலகம் செல்வோரும் சரி, மற்ற தொழிலாளிகளும் சரி வேலைக்குப் போகுமுன்பும், வேலை முடிந்து வரும்பொழுதும் மதுவருந்தியே செல்கின்றனர்.

ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பும் காலையிலிருந்தே பல வயதினரும், பல தரப்பினரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளே போவதையும், வெளியே செல்வதையும் காணலாம்.

எனவே பகல் நேரங்களில் மதுபானக் கடைகள் கண்டிப்பாக திறக்காமலிருந்தால், போதையில் மக்கள் தள்ளாடி விழுந்து கிடக்காமலும், வாகனங்கள் ஓட்டி விபத்தை ஏற்படுத்தாமலும் இருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

விபத்தினால் ஏற்படும் இறப்பைத் தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் மிக மிக அத்தியாவசியத் தேவை. ஆனாலும், தலைக்கவசம் கொண்டு செல்வதில் ஒரே ஒரு பிரச்னை உண்டு. இதற்கு இருசக்கர வாகனம் தயாரிப்போரும், அரசாங்கமும் உறுதியாக ஒன்று செய்ய வேண்டும். திருட்டு போகாமலும், வெயில் மழையினால் பாதிப்பு ஏற்படாதவாறும் இரண்டு தலைக்கவசம் வாகனத்திலேயே பத்திரப்படுத்த கண்டிப்பாக பெட்டி அமைக்க வேண்டும். பெட்டி அமைக்காத வாகனங்களை பதிவு செய்யக் கூடாது. அதன்பின் தலைக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்த சட்டம் கொண்டு வரவேண்டும்.

இப்பொழுது தலைக் கவசம் அணிவதை கட்டாயமாக அமல் படுத்தினாலும், பெரும்பாலோனோர் தலைக் கவசத்தை எடுத்து, பெட்ரோல் டாங்க் மீதும், பக்கக் கண்ணாடி மீதும், (பில்லியனாக வருவோர்) பெண்கள் கையிலும், வைத்தபடி வருகின்றனர். நகர எல்லையை நெருங்கும் போது காவலரிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க குல்லாவைப் போல மாட்டிக் கொள்கின்றனர். தாடையில் பொருத்தும் பட்டையைப் போடுவதில்லை.

சிறு தூரமென்றாலும், நகர எல்லைக்கு உள்ளேயும், வெளியேயும் செல்லும் பொழுதும் அனைவரும் தலைக் கவசம் அணிவோம்; எதிர்பாராத விபத்தைத் தவிர்த்து, நம் உயிரையும் காப்போம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-16, 8:38 pm)
பார்வை : 2117

மேலே