உயிர் சிறுக சிறுக உருக

உயிர் சிறுக சிறுக உருக
======================
காலமும் மனதும்
எப்போதும் சுயம்வரித்துவிடாதா
இதோ காலசர்ப்பம்போல்
நிறைவிலில்லாமல் சுழலுகிறேன்
உச்சத்தின் பின்னலில் வேறெதனாலும்
இனி உந்தி சமன் செய்திடல்
முடியாதுபோல்
அடக்குமுறைக்கு
அப்பாற்பட்டு நிற்கிறது
மெழுகுபூசிய ஒற்றை கணுக்கால்
நீலமே
உன் குடியுரிமைகளை
அகழ்ந்து தீர்க்கின்ற விழிகள்
இனிமேல் விழித்திருக்கப்போவதில்லை
பச்சைத் தரித்த தளிர் நரம்புகளில்
விதி எழுதிவிட்டது மாருதம்
கிளைகள் தோற்கும்
நாளங்கள் விரிசலுறும்
இலைகள் சருகாகும்
பச்சையம் வெடித்து நரம்புகள் பொடிபடும்
தோய்வு விடுத்த
தோல் பட்டைகளிலிருந்து
உலர்ந்துதிரும் எழுத்துகளும்
கனவின் நடுவே
சூல்கொள்ள விரையும்
கந்தர்வ லகரியின்போது
விட்டுவிட்டுத் தழுவும் மெல்லிளங்காற்றும்
மிச்சம் மீதி ஈரம் பதிய
மோகத்துளிகள் சமுத்திரமாகும்
இவள் நீராடிவிட்ட
தாமரையிலைக் கடிதங்கள்
வெட்கம் கொண்டு முகம் மூடும்
பெருவிரல் நாணம் கட்டுடைய
இரவுகளை இம்சிக்கும்
அவன் உடனில்லா சேக்கையில்
உயிர் சிறுக சிறுக உருக
சரித்திரம் எழுதும்
இணை தொலைத்த கொலுசுகளின் ஒப்பாரி
"பூக்காரன் கவிதைகள்"