பொய்யான உலகமும் போலியான மக்களும்
முன்னேற்றம் கண்டதுமே முகநூலில் வாழ்த்துரைப்பார்
தன்னேற்றம் தனைஎண்ணி தலைகனமும் கொண்டிடுவார் .
பின்னூட்டம் எழுதுவதில் பிறர்க்காக எழுதிடுவார் .
பின்னேற்றம் கண்டுவிட்டால் பிறர்நோக மகிழ்ந்திருப்பார் .
பொய்யான வார்த்தைகளும் பொய்த்துவிடும் இவ்வுலகில்
மெய்யான வார்த்தைகளே மெய்பிக்கும் உண்மைநிலை
வெய்யோனின் சீற்றம்போல் வெற்றுரையாய்ப் பேசிடுவார் .
உய்வில்லை எந்நாளும் உணர்ந்திடுவீர் எல்லோரும் .
வாக்கினிலே உண்மையிலை வழக்கிற்கே இடமுண்டாம் .
காக்கின்ற கல்வியையும் கணப்பொழுதில் காழ்ப்புணர்ச்சி
தீக்கதிரால் கக்கிடுவார் தீச்சொற்கள் ஈங்கிவரே .
சாக்குகளும் பலசொல்வார் சங்கடங்கள் செய்திடுவார் .
மாற்றமில்லை என்மனத்தில் மறவாது என்றனுள்ளம்
சீற்றமில்லை நெஞ்சத்தில் சீர்பெறவும் வாழ்ந்திடுவேன் .
ஊற்றாகத் தமிழன்னை உதவிடுவாள் எந்நாளும்
காற்றாக மாறிடுவேன் கவிதைகளை வனைந்திடுவேன் .
உள்ளொன்று வைத்திருப்பார் உண்மைநிலை வேரோன்றே .
பள்ளமான குழியினிலே பக்குவமாய்த் தள்ளிடுவே
கள்ளமான நட்பாகக் கண்முன்னே நடந்திடுவார் .
வெள்ளம்போல் எனதுள்ளம் வேகமாகப் புரிந்துகொள்ளும் .
வீணர்கள் கைகளிலே வீணானப் பாவையாகக்
காணவில்லை என்நெஞ்சம் கண்ணியத்தின் காவியமாம் .
பாணர்கள் வாழ்விதுவா ? பகுத்தறிவர் சொல்லிடுவீர் .
யாணர்கள் என்போன்றோர் யாங்கணுமே வாழ்ந்திடவே .
அடிமையென வாழ்வதற்கே அகிலத்தில் தன்மானக்
கொடிதனையும் குணமாகக் கொண்டவர்கள் வரமாட்டார் .
மிடிநிறைந்த இவ்வுலகில் மீண்டிடுவேன் நானென்றும்
செடிநிறையச் செந்தமிழே செழித்திடுமே என்மனத்தில் .
மதிப்பாக மதிக்கின்ற மானிடர்கள் உள்ளவரைக்
கதியாகத் தமிழன்னை கடவுளென உள்ளவரைப்
பதித்திடுவேன் செந்தமிழைப் பதிந்திடுவேன் தளங்களிலே .
மதிபோன்ற அழகுடைய மங்காதப் பைந்தமிழை .
அனுபத்தில் சொல்லியதே அனைவர்க்கும் பொருந்துவதாம் .
அனுதினமும் மனஉளைச்சல் அகங்காரம் கொண்டோரால்
மனுநீதியும் சொல்லிடவே மானிடர்கள் இல்லையினி .
கனுவெனவும் இனித்திடுமோ காரியையாம் எனதுள்ளம் .