யட்சினி பூஜை - தொடர் -பாகம் 4 பலவீன மனதுள்ளோர் எச்சரிக்கையாகப் படிக்கவும்

................................................................................................................................................................................................
முன்கதைச் சுருக்கம்
அமாவாசையன்று யட்சினிக்கு நரபலி கொடுக்க முடிவெடுக்கிறான் கோடங்கி மாசானம். துணி மொந்தையில் குழந்தையோடு குழிப் பக்கம் வருகிறாள் தியேட்டரம்மா.. சற்று நேரத்தில் “ வியார் வியார் ” என்ற குழந்தையின் அழுகுரல் எதிரொலித்து அடங்கியது..! ! ! குப்புராஜனும், மாசானமும் பார்த்தபோது மூடப்பட்ட குழியருகில் மயங்கிய நிலையில் கிடந்தாள் தியேட்டரம்மா..! ! !
................................................................................................................................................................................................
குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நல்ல விதமாய் பலிபூஜை முடிந்ததில் மாசானத்துக்கு சந்தோஷமென்றாலும் ஏனோ திருப்தியில்லை..! அதன் பிறகு தியேட்டரம்மாளும் நல்லபடி இருப்பதாகத்தான் குப்புராஜன் தெரிவித்தார்..
செல்விதான் பாவம்..! ஒரு இருபதாயிரமாவது அவள் கையில் திணித்திருக்க வேண்டும்..!
மாசானம் பரம்பரை குடுகுடுப்பைக்காரன்.. நரபலியோ, கன்னி பூஜையோ அவன் தொழில் தர்மம் என்பதால் அது தப்பிதமாக அவனுக்குப் பட்டதில்லை..
செல்வியை ஏமாற்றியது கூட அவனை உறுத்தவில்லை.. செல்வி மாசானத்தை நம்பி குழந்தையைக் கொடுக்கவில்லை... முத்தாலம்மன் சாட்சியாக குழந்தையைக் கொடுத்தாள்.. தனது பக்தையை அந்த அம்மன் ரட்சித்திருக்க வேண்டும்..! அவள் கோட்டை விட்டால் மாசானம் பொறுப்பாக முடியாது..! ! !
அவனுக்கிருந்த உறுத்தல் ஒன்றே ஒன்றுதான்..
யட்சினிகள் பேய், பிசாசு, ஆவிகள் போலல்ல..!
ஆத்மா தான் செய்த அதிகப்படி புண்ணிய பலன்களை ஒரே பிறவியில் அனுபவிக்கக் கூட வில்லை என்றால் அது யட்சினியாகும்..! ஏதேனும் நல்ல மரம், பசு, சங்கு, ஆறு, குளம், கன்னிப் பெண்ணின் உடம்பு என்று எதிலாவது தங்கிக் கொண்டு, சித்தத்தினால் புண்ணிய பலன்களை சுகித்துக் கொண்டிருக்கும்.. தனது இருப்பிடம் சூதகமானால் அந்த இடத்தை விட்டு வெளியேறி விடும்.. தேமே என்றிருக்கும் யட்சினியை தொந்தரவு செய்தால் தன் கோபத்தைக் காட்டும்.. பரிகாரம் செய்தால் சாந்தமாகி விடும்.. ஒன்றும் செய்யாமல் சில காலம் சும்மா இருந்தாலே கூடப் போதும்..! புண்ணிய பலன் முடிந்ததும் யட்சினி பித்ரு லோகம் போய் விடும்.. !
இப்படித்தான் அவன் குருநாதர் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்..!
ஆவிகள் போல் அடுத்தவர் உடம்புக்குள் வருவது யட்சினியின் இயல்பல்ல..! அதுவும் கல்யாணமான பெண்ணின் உடம்புக்குள்..? ஊஹூம்..! இத்தனைக்கும் குப்புராஜன் வீட்டிலே பதினான்கு வயதில் அவர் மகளிருக்கிறாள்..! ! வருவதாயிருந்தால் அவள் உடம்பில் வந்திருக்கலாமே?
கால ஓட்டத்தில் யட்சினிகளும் மாறி விட்டனவோ ? ? ?
எது எப்படியாயினும் பலி கொடுப்பது என்கிற முடிவிற்கு எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை.. இதனால் மாசானம் இந்த நிகழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை.. மேலும் யோசித்துச் செயல்பட நேரமில்லை.. சம்பவங்கள் வேகவேகமாக நடந்து விட்டன..!
இப்போது..
.
நிதானமாக யோசித்துப் பார்க்கிறான்..
தியேட்டரம்மா தானாக எதுவும் சொல்லவில்லையே? தன் வாயால்தானே விஷயத்தை
வாங்கினாள் ???
ஏதோ தப்பு நடந்திருக்கிறது..! ! !
மாசானத்துக்கு இப்போது அறுபத்தெட்டு வயதாகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி ஒற்றைத் தலைவலி வருகிறது ..! தலைவலி என்றால் சும்மா “விண் விண்” என்று தெறிக்கும். அதுவும் அன்றொரு நாள் அந்த பிரமாண்டமான செல்வியின் முகத்தைப் பார்த்ததிலிருந்து..!
மாசானத்தின் பெரியப்பாவுக்கு இப்படித்தான் ஒற்றைத் தலைவலி கண்டது.. அவரும் மாந்த்ரீகர்தான்.. அவர் யாகம் செய்யும்போது நேர்ந்த ஒரு தவறு..! ஒரு மாதத்தில் அவர் இறந்து போனார்...
ஒரு தடவை காலியிடத்துக்குப் போய் பார்த்துவிட்டு வரலாமா ??
இன்றே காலியிடம் போக வேண்டும்.. நாளை காவல் போட்டு விடுவார் குப்புராஜன்..! பிற்பாடு ஒரு குடுகுடுப்பாண்டி உள்ளே நுழைய முடியுமா?
மாசானத்தின் குழப்பத்தை கிஞ்சித்தும் லட்சியம் செய்யாமல் எனக்கென்ன என்பது போல் இருந்தது காலியிடம்..!
அமாவாசை கழிந்த இரவு, தூக்கலான இருட்டுடன் நிசப்தமாயிருந்தது..
அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தில் நோட்டமிட்டான் மாசானம். இதோ, இங்குதான் குழி தோண்டியது..
ப.. பக்கத்தில் இது என்ன?
அது ஒரு கால்.. குழந்தையின் கால்... தனியாக விழுந்து கிடந்தது..!
நாய் குதறிப் போட்டிருக்குமோ ? ?
மாசானம் அந்தக் காலை கையிலெடுத்துப் பார்த்தான்.. பிசிபிசுத்து அமுங்கியது..! இது நிஜக் காலல்ல...
மாவுப் பொம்மை..! ! ! ! ! ! !
தொடரும்
..........................................................................................................................................................................................