சாதி ஒரு பரம்பரை நோய்

சாதி ஒரு பரம்பரை நோய்



"ஒரு கட்டுரை எழுதி,அதில் நால்வருக்கு புத்திபுகட்டி,நடப்பு சமூதாயத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு என் அறிவுச்சுடருக்கு பிரகாசம் இல்லை. எழுதியதற்க்கு காரணம் கோபம், என் கோபத்திற்கு சரியான வடிகால் கிடைக்கததால் இந்த கட்டுரை.நண்பர்களிடம் இதை பற்றி விவாதித்து உச்சுகொட்டி முடிப்பதற்கு மனம் தயாராகவில்லை.

"மனைவி கண் முன்னே காதல் கணவன் வெட்டிக்கொலை "இந்த செய்தி முதலில் தினமும் நடக்கும் சம்பவங்கள் என்றே கடந்து சென்றேன்.ஆனால் அதன் வீடியோ பார்த்தபொழுது,என் இமை அசையவில்லை, வயிற்றில் எதோ செய்தது,வீடியோ முடியும்பொழுது என் இமை ஓரத்தில் கண்ணீர் மட்டும் இருந்தது.என்னால் அது மட்டுமே செய்யமுடியும் என்ற கையறு நிலை.

"சப்தம் இல்லாத வீடியோ அது,சாலை எங்கும் மனிதர்கள்,கணவன் ,மனைவி புதிய ஆடையை வாங்கிக்கொண்டு வெளியே சாலைக்கு வந்தனர்.அருகில் ஒவ்வொரு மனிதர்கள், அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் அருகே ஒருவன் இருசக்கர வாகனத்தில் வந்து நிற்கின்றான், அலைபேசியில் ஏதோ பேசிக்கொண்டு இருக்கின்றான்,மற்றும் ஒரு ஆட்டோ, அதில் அந்த ஆட்டோவின் டிரைவர், அருகே ஒரு கார் மட்டும் நின்று இருந்தது. அடுத்த பத்து நொடிகளில் ,அந்த பையனுக்கு பின்னாள் இருவர் நின்றுகொண்டு இருக்கின்றனர்.திடீரென்று அதில் இருந்த ஒருவன் ,அந்த கணவனின் மேல் அடுத்தடுத்து வெட்டுகள் விழுகிறது .தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு.அடுத்த சில நிமிடங்களில் கணவன் இறக்கிறான் மனைவி கண் முன்னே, அடுத்த நாள் செய்தி ஆகிறான் அவன் "

"சுற்றிஇருந்த மனிதர்கள் எதோ சினிமா ஷூட்டிங்கை வேடிக்கை பார்ப்பதை போல பார்த்துக்கொண்டு இருந்தனர்.நடைமுறை வாழ்க்கையில் நானும் அங்கு இருந்துதிருந்தால் சென்று காப்பற்றி இருப்பேன் என்று சொன்னால் அது என் போலித்தனம்."

"அந்த சம்பவம் நடக்கும் முன் என்னவெல்லாம் அவர்கள் தங்கள் வருங்காலத்தை பற்றி என்னவெல்லாம் யோசித்து இருப்பார்கள்,அவர்களின் கனவுக்கு எல்லை இருந்து இருக்குமா?,அவர்களின் இருபது வருட வாழ்க்கையின் முடிவு இந்த அளவுக்கு இருக்கவேண்டுமா ?

" மூன்று நிமிடத்தில் எல்லாம் முடிந்தது"

"அவர்கள் செய்த தவறுதான் என்ன?திருமணம் செய்ததா?அதில் தவறு இல்லை என்று சட்டமே சொல்கிறது. சட்டம் இருக்கட்டும் அது நாம் வரையறை செய்தது. பின் எதற்கு இந்த தண்டனை. இங்கு தவறு செய்யாதவர்களுக்கு தான் தண்டனை கிடைக்கும் போல, அதற்க்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டு வருகிறோம்.இப்பொழுது குற்றங்களை நாம் குற்றங்களாக பார்ப்பதில்லை , அன்றாட பழக்கவழக்கமாக மாற்றிக்கொண்டு வருகிறோம் "


"அந்த பெண்ணின் பெற்றோர்கள் இந்த வீடியோவை பார்த்து இன்பமடைந்தால், அவர்களிடம் எந்த அளவிற்க்கு இந்த சீழ்பிடித்த சாதி எனும் புண் புரையோடிச்சென்று இருக்கும்

"இந்த செயலை செய்ய தூண்டியது எது என்று பார்த்தால் "சாதி "

"இதற்க்கு எவ்வளவு பெரிய சக்தி .ஒரு உயிரை கொடூரமாக கொல்வதற்க்கு தூண்டுகோலாய் உள்ளது ."

"இதற்க்கு காரணம் மூடநம்பிக்கை , படிப்பறிவு இல்லை என்று சொன்னால் அது நம் முட்டாள் தனம் ,கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களின் பெற்றோர்களின் கெளவரவத்திற்க்கு பங்கம் வந்து விட்டது,மாசு தொற்றிக்கொண்டது.இதை எப்படி துடைப்பேன். என் குடும்பத்தை பற்றி பக்கத்து வீட்டார் என்ன சொல்வார்கள் , உறவினர்கள் நம்மை ஒதிக்கிவிடுவார்கள் என்ற பயம். நம் முதுகிற்கு பின்னால் ஏளனமாய் பேசுவார்களே என்ற உறுத்தல். இதை எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்கள் இந்த செயலை செய்ய வைக்கிறது"

"அடிப்படை பிரச்னை என்னவென்றால், நாம் தொன்று தொட்டு சில வழக்கத்தை பின் பற்றி வருகிறோம், சில வழக்கத்தை மறந்தும் விடுகிறோம். ஆனால் சாதி மட்டும் நம்மோடு ஒட்டிக்கொண்டு வருவது ஏனென்றால் நாம் தேர்ந்து எடுக்கும் தலைவர்கள், அதை வைத்து அரசியல் செய்வதினால்."

"இதை தடுக்க என்ன வழி என்று யோசித்தால்,இங்கு நான் மட்டும் ஒதுக்கபட்டுவிடுவேன், நான்,எனை சார்ந்தவர்கள் மட்டும் தனித்து இருப்பார்கள்,அவர்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே மட்டும் பதில் "

"சாதி ஒரு பரம்பரை நோய் போல ,இது என் சந்ததிற்கு மட்டுமன்றி அடுத்து வரும் தலைமுறைக்கும் தொற்றிக்கொண்டுதான் வரும். அப்பொழுது நம் கனவிலும் நினைத்து பார்க்கமுடியாத பல சம்பவங்கள் நடைபெறும்."

"அப்பொழுது இந்த கட்டுரை போல ஒருவன் எழுதிக்கொண்டு இருப்பான் அல்லது இதை விட கொடூர சம்பவத்தை பார்க்க பழக்கப்பட்டு சகித்து கொண்டு இருப்பான் "

எழுதியவர் : ஸ்ரீனிவாசன்.அம்சவேணி (15-Mar-16, 5:45 pm)
பார்வை : 175

சிறந்த கட்டுரைகள்

மேலே