உள்ளே வெளியே
'பிறந்தோம், வளர்ந்தோம்'
'சுவைத்தோம், ரசித்தோம்'
காதல் கல்யாணம் குழந்தை குட்டி
என்று இருந்தோம், பிரிந்தோம்;
இருந்தும்
உள்ளுக்குள் எல்லோரும்
சந்தோசமாகவாக இருக்கிறோம்?
இன்று ஐ.நா வெளியிட்டுள்ள உலக சர்வேயில்
டென்மார்க் தான் உலகத்திலே நம்பர் 1
சந்தோசமாக இருப்பதில்;
இந்தியாவோ 118-ம் இடத்தில்.
(2013-ல்=111வது இடம், சறுக்குகிறது நம் சந்தோச மனநிலை)
ஏன் நாம் சந்தோசமாக இல்லை?
அடுத்தவர் நம்மைப்பற்றி
என்ன நினைக்கிறார்?
என்ன பேசுகிறார்?
அந்த அவருக்காக
நம் எண்ணமும் செயலும்
வயப்பட வாழ்ந்தால் நாம் எப்படி
சந்தோசமாக இருக்க முடியும்?
பாசவலையில் சிக்கிக்கொண்டு
பேராசை அலையில் மாட்டிக்கொண்டு
எதை அடைந்தாலும் ஏதாவது இழந்தாலும்
துவண்டு விழுவதும் அழுது வடிவதுமாய் இருந்தால்
எங்கனம் நாம் இனிய உலகத்தில்
சஞ்சரிப்பதும் சல்லாபிப்பதும்?
எத்தனை குழந்தைகள் சந்தோச ஊஞ்சலில்
சாவகாசமாக இருக்க முடிகிறது?
எத்தனை வாலிபர்கள் சுயம் தாண்டி சமூக எண்ணம் கொண்டு
ஆக்கப்பூர்வமாக முன்னேற முடிகிறது?
எத்தனை குடும்பங்கள் இனிமையாக
பொழுதைக்கழிக்க முடிகிறது?
பொருளாதார மேம்பாட்டுடன்
சுகாதார சீர்கேடில்லாமல்
சுவாரஷ்யம் சூழ வாழ முடிகிறது?
உலகத்திலேயே மிதமிஞ்சிய
வளங்கள் வாழ்முறைகள்
இலக்கியங்கள் இயற்கை மூலிகைகள்
எல்லாம் நமக்கு ஏற்பட்டிருந்தாலும்
நெஞ்சம் தொட்டு சொல்லுங்கள்
நிஜத்தில் நாம்
ஆனந்தமாக வாழ்கிறோமா?அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோமா?
நெருடலில் நிழலில் தேடுங்கள்
உங்களால் வாழ முடியும்,
உங்கள் வாழ்க்கை உங்கள் கையிலா?
அல்லது மற்றவர் பிடியிலா?
பொருளாதாரம் பொது சுகாதாரம் மேம்பட்டு
முறையான அலுவல் என்று
அரசாங்கம் நடந்தால்
கையில் பணமும்
அதனால் வசதியும் வாழ்வும் அமையப்பெற்றாலே
ஆனந்தமும் சந்தோசமும்
ஆரோக்கியமாய் வந்து விடுமே?
உழைக்க நேரமுண்டு, வாய்ப்பில்லை;
தொழில் செய்ய மனமுண்டு, பணமில்லை;
முன்னேற முடியும் ஆனால் முட்டுக்கட்டை ஏராளம்.
வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் கூட்டுப்புழுக்களுக்கு
குஞ்சு பொரிக்க முடிகிறதே தவிர
உயரம் பறக்க முடிகிறதா?
உச்சம் தொட முடிகிறதா?
நீங்களே சொல்லுங்கள்..!