காலச்சுவடுகள்-4 -

முதுமைத் தாகம்

கட்டுடல் விட்டுப் போகும், கணுக்களில் வலி,எ டுக்கும்;
கொட்டிடும் முடியால் முட்டைக் கூடுபோல் கபால மாகும்!
அட்டைபோல் இருந்த மீசை அசைவிலாப் பூரான் ஆகும்!
பட்டுடல் சுருங்கி நிற்கப் பளபளப்(பு) ஒளிந்து கொள்ளும்!

எட்டடி பாய்ந்த கால்கள் இரண்டடி நடந்து சோரும்!
விட்டமும் துடைத்த தோற்றம், வெறுந்தரை பார்த்து நிற்கும்!
கட்டிய மனைவி தன்னைக் கட்டிலில் வைத்த கைகள்
தொட்டிட நடுங்கும் வேறு துணையெனத் தடி,பி டிக்கும்!

சட்டமாய் உண்ட வாயோ, சட்டியில் குடிக்கக் கேட்கும்!
முட்டவும் குடித்து விட்டால், மூச்சு,கீழ் மேலாய் ஓடும்!
பட்டமும் அறுந்த தைப்போல், படபடப்(பு) இதயம் கொள்ளும்!
இட்டமும் இல்லா வாழ்வு,ஏன்? இளமையில் கொல்,என் பேனே!


மூப்புதான் உடலின் வண்ணம்;
=முதுமையோ மனதின் எண்ணம்!
காப்புதான் அடக்கம் என்பர்!
=கற்றறிந் தவராம் மூப்பர்!
சீப்புதான் எண்ணம், ஆனால்
=சிறுமுடி யேனும் தேவை!
தோப்பெனும் நினைவால் மூப்பைத்
=தோற்றிடச் செய்கின் றேனே!

நினைவெனும் முக்கா டிட்டு
=நிகழ்வினைக் குறைத்துக் கொண்டு
முனைவுகள் வளர்த்துக் கொள்ள
=முதுமையைத் தள்ளிப் போட்டுப்
புனைவுகள் செய்வ தாலே
=போகுமோ உடலின் மூப்பும்!
மனைவியே சிலபே ருக்கு
=மந்திரம் என்று கேள்வி!
==++==

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (19-Mar-16, 10:08 am)
பார்வை : 141

மேலே