காலச்சுவடுகள்- 3 நா காமராசன்
(திருநங்கையர் பற்றிய கவிதை)
காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப்பாலின் சரித்திரத்தில்
சதுராடும் புதிரானோம்
விதைவளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சதைவளர்க்கும் பிணம்நாங்கள்
சாவின் சிரிப்புகள்
மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதிவைக்க
முடவன் கை எழுதியதை
முழுக்குருடர் படித்ததுண்டோ?
மூங்கையின் பாட்டானோம்
முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்
சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்
தலைமீது பூவைப்போம்
தாரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்
தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.
(நா. காமராசன் )