நான் என்னும் சுயம்
எங்கே நிம்மதி என தேடும்
மனதினுள் இருந்த அமைதியை
தொலைத்து விட்டு தவிப்பது
சுயம் என்னும் நான் தானே!
நீயோ உன் நலனோ
உருவானதும்
ஒழுங்காவதும்
உன்னைச்சுற்றிய
சூழலே!
சுயம் இருந்த சூழலை
பிரித்து பொருள் காண் -
சூழல் இன்றி சுயம் இல்லை.
உயிர் விட்ட உடல் எப்படி
உன்னதமாகும்?
சூழல் என்பது எது?
இருக்கும் இடம்
உனக்கென இருந்த இடம்
உன்னை தந்த இடம்
நீ உழழுமுன் பிறந்த இடம்
அது உனக்காய் அளிக்கப்பட்டது
அதை மேம்படுத்த வந்த நீ
சுயநலம் நாடி குற்றம் நாடி
சுயத்தை பிரிந்தால்
அச்சுயம் இயற்கை அல்லவே,
செயற்கை தானே.!
இயற்கை உன்னை
இருத்திய இடம்
இன்னும் சிறக்க செய்தலே
உனக்கு சீர் செய்யும் சிறப்பு செய்யும்;
அதை விடுத்து எங்கெங்கோ
ஏன் அலைகிறாய்?
இருந்த இடத்தில்
இன்பத்தை உருவாக்கவே உன்னை
இயற்கை ஈன்றது.!
கிளிக்கு ரெக்கைகளை
அருளியது
விட்டு செல்ல அல்ல,
மீண்டு வர.
பட்டாம்பூச்சி கூட
பறந்து சென்றது
தேன் உண்டு திரும்பி வரவே.
உனக்கு மட்டும்
உன் உறைவிடம்
பிடிக்காமல் ஏன்
பிரிந்து செல்கிறாய்?
உன் இடத்தில் இரு,
அதை வளமாக்கு.
சூழல் சுகம் அடையவே
சுயம் உருவானது.
சுயம் மட்டுமே முக்கியமென்றால்
அது பாவம், பிணி, நோய் என்பதாகும்.
வேடந்தாங்கலில்
எந்த பறவையும்
நிரந்தரமாக
தங்குவதில்லை,
நீ மட்டும் ஏனோ பறந்தே இருக்கிறாய்,
உன் சூழலை பிரிந்தாய்.
உன்னால் ஏது நலம்,
அப்படியிருக்க
உனக்கு மட்டும் எப்படி நலம்?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
