நடைபாதை இந்தியர்
ஜனத்திரள்,
கொடும்வெயில்,
விரட்டும் பணி,
வியர்த்த ஈரத்தில் உடை,
உள்ளுக்கும் தகிக்கும் வேகம்,
காரியம் சாதிக்கிற விவேகம்,
உள்ளத்துடன் போராடும் பொறுமை,
உழைக்கத்தயாராய் தோள்கள்,
அதனைத்தாங்கிடும் தேகம்,
காத்திருப்பில் கணக்கிடும் மூளை,
கனத்தாலும் கலையாத கண்கள்,
கவனமாய் மொழிபேசும் கரங்கள்,
அடுத்தவர்க்கும் சேர்த்தே பகுக்கும் யுக்தி,
தளர்வினை வளர்வாய் ஏற்கிற மனம்,
திட்டமிடலை அகத்தே சுமக்கிற நியதி,
மூர்க்கத்தில் முடக்கப்படாத நிதானம்,
அவசரத்தின் அடிபோகாத சிரத்தை,
முடிவெடுக்கும்வரை தலைதாழ்ந்த சிந்தை,
நடை பரபரத்தாலும் மிடுக்கற்ற தோற்றம்,
கடந்துபோனதும் மறந்துபோகிற உருவம்,
எவரோ ஒருவர் என்ற கேள்விக்கு உட்படாதவர்,
கணக்கினை நிறைவேற்றி கூட்டத்தில் கரைகிறவர்,
நிச்சயம் இவரெல்லாம் வெளிக்கிரகவாசியல்ல,
இவரே தாயகத்தின் ரேகைகளை வடிவமைப்போர்..............