தலைகனம் தவிர்க்கணும்
தலைமுறை தாண்டிய தலைகனம் – அதை
தலை கிரீடம்போல் ஏன் சுமக்கணும்..?
தலைமைக்கு வேண்டும் நல்லிலக்கணம் – அதை
நாளைய தலைமுறை கடைப்பிடிக்கணும்…!
பல் சொத்தைவிழுந்தால் பிடுங்கத் தயங்காதே
சொல் சுத்தமில்லாதவனிடம் நெருங்கிப் பழகாதே..!
புல் பிடுங்கும் வேலையும் ஒரு வேலைதான் – அதை
எள்ளி நகையாடும் உரிமை நமக்கில்லையாம்..!
மாற்றி யோசிப்பவனை மட்டம் தட்டாதே - அவனால்
மாற்றம் வரும்போது போற்றத் தயங்காதே! -உன்னை
தூற்றும் மனிதனையும் விடாது தாங்கிப்பிடி – அவன்
போற்றுவான் உன்னை தனது மனசாட்சிப்படி…!
சமுகம் என்பது ஒரு விளக்குமாறு – அதுதான்
நம் வளர்ச்சிக்கு செய்யுது மறைமுக கைமாறு.!
வியூகம் வகுத்து செயல்பட்டால் கடின செயலும்
நமக்கு கால் தூசு! நாமும் ஆகலாம் பில்கேட்சு..!
ஆற்றின் ஆழம் அறிந்திருந்தும் – அதில்
நீச்சல் அடிக்கத் துணிவது ஏன்…?
ஏற்ற இறக்கம் வாழ்க்கையில் சகஜம் – அதை
ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன்…?
பங்கு சந்தை வீழ்ச்சிக் கண்டால்
கள்ள சந்தையில் நுழைவது ஏன்..?
பங்கு தந்தை என்றப் பெயரில்
பாலியல் தொல்லை கொடுப்பது ஏன்..?
சொத்து குவித்த குபேரர்களுக்கு – தினம்
பத்திய உணவே பலகாரம்!
செத்துப் பிழைக்கும் கூலிகளுக்கு – தினம்
பழைய சோறே ஆகாரம்!
நேற்று நடந்ததை மறக்க கற்றுக்கொள்
இன்று என்ன என்பதை நினைத்துக்கொள்
நாளைய வரலாறு நம்மை பேசட்டும் - உலகம்
நாம் யாரென்று நன்றாய் அறியட்டும்..!

