காப்பாளே அன்னை கனிந்து
முன்னாலே பெண்டிர் முளைப்பாரி ஏந்திவர
அன்னைமுத்து மாரியவள் ஆடிவந்தாள் - மின்னிடையில்
பட்டுடுத்தி காற்சதங்கைப் பாட்டிசைக்க செஞ்சாந்துப்
பொட்டுடனே தேவிவந்தாள் பூத்து .
பூத்திருந்த மாலைகளும் பூரிப்பால் புன்னகைக்கும்
ஆத்தாளின் தோளில் அழகாக ! - சாத்திய
வேப்பிலையின் வாசத்தில் வேதனைக ளோடிவிடும்
காப்பாளே அன்னை கனிந்து .
கனிந்துசிந்தும் பார்வையும் கள்ளமனம் மாற்ற
இனியவளின் பேரருளும் ஈர்க்க - பனிக்கும்
விழிகளும் தாயவள் மென்கருணைப் பேறால்
பொழியு மருவியைப் போல் .