கண்ணெதிரே தோன்றினாள்
என்னெதிரே இருந்தவரை ரசித்திடத்தான் தோணலையே
உன்னழகைக் கண்ணுக்குள்ளே புசித்திடத்தான் தோணலையே
மண்ணின்நிறம் உன்கரத்தால் அழகாக ஆகிடுமே
என்வழியில் இதம்கொடுத்து துணையாக இருந்தவளே...
உனைவிட்டு அலைபேசி யதைத்தானே அணைத்திருப்பேன்
ஊர்விட்டு ஊர்சென்று திரைப்படங்கள் பார்த்திருப்பேன்
களத்துமேட்டு மேலமர்ந்து சீட்டாடி நாள்களிப்பேன்
உன்கூட்டுச் சேராமல் படுத்துறங்கி மதியிழப்பேன்...
பாலைவன வாழ்க்கையிலே பாவியிவன் சிக்கிக்கிட்டேன்
சோலையுனை யிழந்துயிப்போ சோகத்திலே மாட்டிக்கிட்டேன்
ஆலைவேலை செல்லும்வேளை கண்விழிகள் சிகப்பாச்சு
ஆறுதலும் யாருமில்லே மாறுதலும் கிடைக்கவில்லை
ஊர்ப்பயணம் செல்லஇன்று ரயிலேறி அமர்ந்திருக்கேன்
உனைநினைத்து கவியெழுத எழுத்தாணி வச்சிருக்கேன்
வரிவரியாய் எழுதும்வேளை கண்ணயர்ந்தே தூங்கினேன்
நான்விழிக்க "இயற்கை"பெண்ணே கண்ணெதிரே தோன்றினா(ள்)ய்...