போற்றத்தகும் பண்புகள் --- விருந்தோம்பல்

போற்றத்தகும் பண்புகளில் போற்றுகின்றேன் விருந்தோம்பல்
ஏற்றிடுங்கள் விருந்தோம்பல் எத்திக்கும் புகழ்பரப்பும்
மாற்றங்கள் ஈங்கின்றே மண்ணுலகில் இல்லையெனப்
போற்றுங்கள் எல்லோரும் பொன்றாத விருந்தோம்பல் .


விருந்தோம்பல் செய்வதுவே விண்ணகமும் வாழ்த்துவராம்
கருத்தாகச் சொல்லிசென்ற கண்ணியத்தின் செயலன்றோ
விருப்பமுடன் அளிப்பதுவே விருந்தோம்பல் முறையன்றோ .
வருத்தங்கள் இதிலில்லை வரமாகி நின்றுவிடும் .


பண்புகளாய்ப் போற்றுதற்குப் பார்மிசையும் செப்புகின்ற
கண்களென எண்ணிடுங்கள் கருத்தான விருந்தோம்பல்
எண்ணங்கள் சிறந்திடவும் எண்டிசையும் வாழவேண்டின்
பண்களுடன் விருந்தோம்பல் பற்பலவாய் அளித்திடுவீர் .


செய்கின்ற விருந்தோம்பல் சேவையென ஏற்றிடுவீர் .
பெய்கின்ற மாரியெனப் பெருமையினைப் பெற்றுவிடும் .
உய்வுண்டாம் இதற்கிங்கே உன்னதத்தின் நன்னெறியாம் .
மெய்பொருளை உரைத்திட்டேன் மேன்மையினைப் பெற்றிடுவீர் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Mar-16, 2:04 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 75

மேலே