கடைசிக் காதலும் கரையும் நேரம்

உன் நினைவுகளின்
நிழல்களால் நிரப்பப்பட்ட
இந்தக் கோப்பையில்
கடைசித்துளி கண்ணீர்
கரையும் பொழுதுகளில்
காலாவதியாகிப் போயிருக்கும்
இந்தக் காயம்


உனது விம்பத்தை
தேக்கிவைத்து தேக்கிவைத்தே
தேய்ந்து போன விழித்திரையை
கண் இமைகள் இரண்டும்
இறுக்கமாய் மூடியிருக்கும்


உள்ளத்தில் உன் பெயரை
உச்சரித்து உச்சரித்தே
உதிரத்தைப் பாய்ச்சிய
இதயம் உறங்கிப்போய்
உறைந்து போயிருக்கும்


காணுமிடம் எல்லாம்
உன்பெயரைக் கையெழுத்தாய்
கிறுக்கிய கைகளிரண்டும்
கைகூப்பிக் கட்டப்பட்டிருக்கும்


நீயிருக்கும் திசை தேடி
விரைந்தோடிய கால்களிரண்டும்
விசையிழந்து தசையிறுகி
விறைப்புடன் நீண்டிருக்கும்


அங்கங்கள் அத்தனையும்
அடங்கிப்போய் உறங்கிப்போய்
காலாவதியாகிப்போன காயத்தில்
காய்ந்துபோன கண்ணீரோடு
கரைந்து போயிருக்கும் உன் மீதான
என் கடைசிக்காதலும்

எழுதியவர் : சர்மிலா (28-Mar-16, 11:58 am)
பார்வை : 192

மேலே