வாக்குத் தவறும் நாக்கு
கண்ணகி ராமனுடன் கடைதெருவில் நின்றாலே
==கண்ணை உறுத்துகிற கடும்பார்வை பார்க்கின்ற
புண்ணிய வான்களின் பொல்லாதக் கண்களால்
==புனிதமிழந் துபோய்ப்பிள்ளை பெற்றெடுக்க வைக்கின்றக்
கண்றாவித் தனமென்னும் கலாச்சார சீர்கேடு
==கட்டவிழ்த்து விட்டுவிடும் காதகங்கள் தனைசெய்தே
வெண்ணிலா களங்கமாக்கும் வித்தகத்தின் மத்தியிலே
==விளைகின்ற வாக்குகளே தவறுக்கு வழிகாட்டி.
கலைஞர்களின் வளர்ச்சிக்கு கைகொடுப்போம் என்றுதினம்
==கச்சேரி மேடைகளில் கவனமுடன் பேசிவிட்டு
இலைமறைகாய் என்றிருக்கும் இல்லாத பேர்களிடம்
==இருப்பதெல்லாம் வாங்கிக்கொண் டேப்பம்விடும் முதலைகளோ
விலைமதிப்பு இல்லாத படைப்புகளை விலைபேச
==வெற்றிபெற காத்திருக்கும் வீணர்ககளை நம்பியிங்கு
வலைவிழுந்த மீனாகி வருந்துகின்ற பேரறிவார்
==வாக்குதனை தவறாத நாக்குகளின் போக்குகளை
அரிச்சந்திர பரம்பரைபோல் அருள்வாக்கின் வசீகரிப்பால்
==அன்றாடம் பிழைப்புக்காய் ஆங்காங்கே பொய்சொல்லும்
நரித்தந்திர நாக்குகளே நாட்டினிலே ஏராளம்
==நாலுகாசு பார்ப்பதற்கு நடக்காததை நடந்ததென்றும்
தெரியாததை தெரியுமென்றும் திருட்டுபய மேதுமின்றித்
==தித்திப்பாய் பேசிவிட்டு திசைமாறும் மனிதர்கள்
புரிகின்ற பித்தலாட்ட புகழோங்கி விடுவதற்கு
==புனிதமற்ற நாதிறந்தால் பொய்கள்மடை திறக்குமன்றோ
வாக்குகளை தவறவிடும் நாக்குகளை வைத்திருந்து
==வாக்காளப் பெருமக்கள் எனவிளித்து கட்டவிழ்க்கும்
வாக்குகளால் நாம்வென்றால் சொன்னதெலாம் செய்வோமெனும்
==வாக்குறுதி வழங்குவதை வழக்கமாகக் கொண்டவர்கள்
வாக்குகளை நம்பிநாமும் வாக்களித்து வெல்லவைக்கும்
==வகைகெட்டச் செயலாலே வாக்குமாறும் மனிதர்களின்
நாக்குகளை வலுபடுத்தி வையகத்தில் மென்மேலும்
==நாமும்தான் அவர்போலே நாளாந்தம் மாறுகிறோம்.
பெத்தவங்க தேவையில்லை பேரன்பே போதுமென்றே
==பின்னாலே வரும்போது பட்டுத்துணி பஞ்சுமெத்தை
சொத்துசுகம் வேண்டாமென சொல்லுகின்ற சுந்தரிகள்
==சுகங்குன்றும் நேரத்திலே சொன்னவாக்கை மறந்தேதான்
மத்தவங்க வாழுகின்ற மணவாழ்வை பார்த்தவுடன்
==மனம்புழுங்கி நாபிரண்டு மனம்விட்டே சுடுசொல்லால்
சொத்தையுனை கட்டிக்கிட்டு சுகங்கண்ட தென்னவென்று
==சூசகமாய் வாக்குகளை தவறிடுவார் காணீரே.
*மெய்யன் நடராஜ்

