அனைவருக்கும் வீடுகள் சாத்தியமா--------------------அனைவருக்கும் வீடு திட்டம், , மத்திய அரசு,-- ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம்

அடுத்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் மத்திய அரசால் கட்டப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.81,975 கோடியை ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழைகளுக்கும் நகரங்களிலும் கிராமங்களிலும் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறது அரசு.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சிக்கு வந்த அரசுகள் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளைக் கட்டித்தரும் கனவுகளோடு திட்டங்களைத் தொடங்குகின்றன. பிறகு, அவற்றில் தொய்வு ஏற்பட்டு அப்படியே நிறுத்திவிடுகின்றன. இப்போதுள்ள நிலையில், நகரங்களில் 2 கோடி வீடுகளும் கிராமங்களில் 4 கோடி வீடுகளும் தேவை என்கிறது மத்திய அரசு. இந்தியப் புள்ளிவிவர ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த சம்ஷேர் சிங் 18 கோடி வீடுகள் தேவைப்படும் என்கிறார். மற்றொரு அமைப்போ 2022-ல் மட்டுமே 11 கோடி வீடுகள் தேவைப்படும் என்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, மொத்தத் தேவையில் ஒரு கோடி வீடுகள் என்பது சிறு பகுதிதான்.

இந்தத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்பு, இதுவரையில் இத்தகைய திட்டங்கள் ஏன் தோல்வி அடைந்தன என்று ஆராயப்பட்டுள்ளது. எவையெல்லாம் தடைக்கற்கள் என்று அடையாளம் காணப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை நீக்கப்பட்டிருக்கின்றன. எனவே, திட்டமிட்டபடி ஒரு கோடி வீடுகள் மட்டும்தான் கட்டப்படும் என்றாலும், சில புதிய நடைமுறைகளுக்கு இது முன்னோடியாக இருக்கும் என்பதால் வரவேற்கப்படக்கூடியதே. இந்தத் தொகையில் ரூ.21,975 கோடி ‘வேளாண்மை - ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி’(நபார்டு) மூலமாகக் கடனாகத் திரட்டப்பட்டு 2022-க்குப் பிறகு, இந்தக் கடன் அடைக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு 40% தொகை மாநில அரசுகளால் தரப்பட வேண்டும். இதுதான் நெருடுகிறது. ஏனென்றால், பிரதம மந்திரியின் இந்தத் திட்டத்துக்கு மாநில அரசுகள் நிதி தரும் என்று எதிர்பார்க்க முடியாது. 2011-ல் திரட்டப்பட்ட மக்கள்தொகைத் தரவுகளின் அடிப்படையில், சமூக - பொருளாதார நிலை, சாதி ஆகியவற்றின் பின்னணியில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் திட்டத்துக்கான தொழில்நுட்ப உதவியை அளிக்க ‘தேசியத் தொழில்நுட்ப ஆதரவு முகமை’ ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்குப் பயனாளிகளே உரிமையாளர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட திட்டத்துக்கு வீடுகளைக் கட்ட போதிய இடம் தேடுவது ஒரு சவால். கிராமப்புறங்களில்கூட அரசுக்குச் சொந்தமான இடம் கிடைப்பது அபூர்வம். நகரங்களில் இடம் கிடைத்தாலும், அது பயனாளிகள் எளிதில் வேலைக்குச் சென்றுவரும் இடமாக இருப்பது முக்கியம். ஆனால், அப்படிக் கிடைப்பதில்லை என்பதே யதார்த்தம். எனவே, ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் எந்தத் திட்டத்தையும் ஒரு சில அம்சங்களை மட்டுமே பரிசீலித்துவிட்டு முடிவுசெய்வது சரியல்ல. எல்லாவற்றையும் நன்கு அலசி ஆராய வேண்டும். யாருக்காக வீடு கட்டப்போகிறோமோ அவர்களையும் இணைத்து ஆலோசனை கலப்பது நன்மை தரும். வீடுகளை முழு உரிமைக்கு விற்பது அல்லது வீடுகளில் குடியிருக்க அனுமதித்து குறைந்த வாடகை வசூலிப்பது, வீடு கட்டும் திட்டத்தில் அரசும் தனியாரும் பங்கேற்பது என்று பல்வேறு அம்சங்களையும் ஆராய வேண்டும்.

எழுதியவர் : (30-Mar-16, 10:52 pm)
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே