யாதுமாகி நின்றாள்

என்னங்க....

என்ன...?

'இங்க பாருங்களேன்.. நான் வரைஞ்சது இந்த ஓவியம் எப்படி இருக்குனு கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்' கணவனின் பாராட்டை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள், கல்யாணி.

அவன் கண்களைக் கூட உயர்த்தாமல் 'ஆமா... இப்ப வரைஞ்சு கிளிச்சு என்ன பண்ண போற.. போ... போயி அடுப்படில ஏதாவது வேலை இருந்தா போய் பாரு... போ...' என்று முகத்தில் அடித்தாற் போல் கூறிய கணவன் சேகரை வெறித்துப் பார்த்தாள்.

தான் வரைந்த சிறு ஓவியத்தையே நன்றாக இருக்கிறது இன்னும் நல்லா நிறைய ஓவியங்கள் வரையனும் என்று உற்சாகப் படுத்திய தந்தையின் நினைவு கண் முன்னே வந்து சென்றது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி செல்லும் ஆசையில் இருந்தவள் தந்தை இறந்துவிடவே விதியின் வசத்தால் கல்லூரி வாசம் காணாமல் திருமண வாழ்வில் புகுந்தாள்.

கணவன் தன் திறமைகளை ஊக்கப்படுத்துவான் என எண்ணிய அவள் எண்ணத்தில் மண் விழுந்தது.

கண்ணீரை கண்களில் சுமந்தவளாய் அடுப்படி சென்றாள்.

'படம் வரையிராளாம் படம்... இப்ப இவளாம் படம் வரையலனு யாரு கேட்டா' என்று சலித்துக் கொள்ளும் கணவனை வெறித்து பார்த்தாள். தனது திறமையை வெளிகாட்டி சாதிக்க இயலாமல் போகும் தனது நிலையை எண்ணி வருந்தினாள்.

வருடங்கள் ஓடின........

அம்மா.... அம்மா.......
'என்னடி எதுக்கு இப்படி கத்துற என்னாச்சு' என்று கத்தி கூப்பாடு போட்ட தன் மகள் புவனாவை கேள்வியுடன் பார்த்தாள்.

'இன்னைக்கு எங்க காலேஜ் ல நடக்கிற ஓவியப் போட்டிக்காக நான் வரஞ்சு வைச்சிருந்த ஓவியத்தை காணல அம்மா. இங்க டேபிள் மேல தான் வைச்சிருந்தேன்'

'இங்க தான் வைச்சேனா அது எங்க போய்ட போகுது அங்க தான் இருக்கும் நல்லா தேடி பாருமா'

'இல்லையே' என்று கூறிக் கொண்டே அறை முழுவதும் அலசினாள். அப்பொழுது ஒரு பெரிய நோட்டு ஒன்று அவள் கண்களில் பட்டது. என்ன இது என்று பார்த்தவள் வியந்தாள்.

அத்தனை பக்கங்களும் அழ அழகான ஓவியங்கள். விதவிதமான கற்பனையில் வித்தியாச வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட சித்திரங்கள்.

வியப்பில் அவள் கண் விரிந்தது.

'அம்மா'

'இது யாரோட நோட்டுமா இவ்வளவு அழகான ஓவியங்களை நான் பார்த்ததே இல்லை' என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் கையில் இருந்த நோட்டை அவசரமாக பிடுங்கி வேறு இடத்தில் மறைத்து வைத்தாள்.

'என்னாச்சுமா இப்ப எதுக்கு அந்த நோட்டை மறைச்சு வைக்கிறீங்க கேட்குறேன்லமா சொல்லுங்க அது யாரு வரஞ்சது...' என்று வியப்பும், கோபமுமாய் கேட்கும் மகளிடம் சிறு தயக்கத்துடனே கூறினாள். அது தான் வரைந்த ஓவியம் என்றும் கணவனுக்குத் தெரியாமல் அவ்வப்போது வரைந்த ஓவியங்களின் தொகுப்பே அது என்றும் தெரிவித்தாள்.

ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியும் கொண்டவள் தனது தந்தை மேல் கோபமும் கொண்டாள்.

இவ்வளவு திறமை மிகுந்த ஓவியரை வெளி உலகிற்கு காட்டாமல் அடுப்பங்கரையில் போட்டு வதைத்துள்ளாரே... என்று கோபத்துடன் தந்தையிடம் சண்டையிட்டாள்.

'ஆண் தனக்கு உறுதுணையாக பெண் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். தனது திறமைகளை சாதிக்க ஊக்கப்படுத்துபவளாய் இருக்க வேண்டும் என்று எண்ணும் தாங்கள் தனது மனைவியிடம் ஒரு திறமை இருந்தால் அதை ஊக்கப்படுத்தி வெளிகொணர்ந்து சாதிக்கத் தூண்டாமல் இப்படி அவர்களின் ஆசையை சாதிக்க துடிக்கும் எண்ணத்தை கிள்ளி எறிவது ஞாயமா..? இது போன்ற அதிகார வர்க்கம் கொண்ட ஆண்களின் ஆணவத்தினால் தான் முன்னேற நினைக்கும் பெண்களும் மூலையில் முடங்கி கிடக்கின்றனர்' என்று ஆவேசத்துடன் பேசியவள் தனக்கு தெரிந்த தோழிகள் மூலம் அந்த ஓவியங்களை எல்லாம் ஒரு கண்காட்சியில் வைக்க முற்பட்டாள்.

ஓவியக் கண்காட்சி இனிதே நடந்தேறியது. வந்திருந்த அனைவரும் ஓவியத்தை கண்டு மெய்மறந்தனர். பாராட்டு மழை வந்து குவிந்தது கல்யாணியிடம். தனது ஆசை, இலட்சியம் நிறைவேறிய சந்தோஷம் மனதில், கண்களில் கண்ணீர் ஆனந்தத்துடன்.... புன்னகைத்தாள், ஓவியர் கல்யாணி.

கணவனின் பார்வையில் உயர்ந்து தெரிந்தாள்...... யாதுமாகி நின்றாள்....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (30-Mar-16, 11:10 pm)
Tanglish : yathumaagi nintraal
பார்வை : 282

மேலே