மது அருந்தும் பழக்கம் உள்ளவரா சற்று நில்லுங்கள், குடி குடியைக் கெடுக்கும்

குடி குடியைக் கெடுக்கும் என்பது பழமொழி எங்கள் எல்லோருக்குமே இது தெரியும். தெரிந்தும் சற்றும் சங்கடம் இன்றி குடியைக் கெடுக்கும் குடியோடே காலத்தை கழிக்கின்றோம். சுந்தோசம் என்றாலும் மது துக்கம் என்றாலும் மது தனிமை என்றாலும் மது இப்படி எங்கும் இந்த மதுவின் ஆதிக்கம் கோரத்தாண்டவம் ஆடுகிறது. மக்களை மாக்களாக்கும் மதுக்கடைகள் ஒருபுறம் மதுவை அருந்தி மனித மாண்புகளை தொலைக்கும் மனிதர்கள் மறுபுறமுமாக ஓடிக்கொண்டிருக்கிறது இன்றைய சமூகம்.
முன்ரரெல்லாம் மதுவை தொடுவது பாவமாகவும் பெருங்குற்றமாகவும் சான்றோர்களால் கற்றுத்தரப்பபட்டது. ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாற்றமடைந்து சாதாரணமான ஒரு விடயமாக பரிணமிக்கத் தொடங்கி விட்டது.
குறுகிய நேர இன்பத்திற்காக மதுவை அருந்தி மயக்கமடைந்து சுயநிலை இழந்து சுயமற்ற மனிதர்களாக வாழ்வை தொலைப்பது மட்டுமன்றி ஆரோக்கியத்தையும் அல்லவா தொலைக்கின்றோம். அது என்ன ஆரோக்கியத்தை தொலைத்தல்? வாருங்கள் …


மதுவும் மனிதனும் (Alcohol and Human)
......................................................................

காபன் அணுக்களின் கூட்டுக்களால் உருவாகக்ப்பட்ட ஓர் இரசாயனக் கூட்டே மதுவாகும். மனித வரலாற்றின் ஆரம்பகாலத்தில் இருந்து மதுப் பழக்கமானது மனிதனிடம் இருந்துவந்துள்ளது. இயற்கையில் இருந்து பெறப்படுகின்ற பதநீர் போன்ற பதார்த்தங்களை ஆரம்பகாலத்தில் மனிதர்கள் அருந்தி வந்துள்ளனர். இன்று இரசாயன ரீதியில் தயாரிக்கப்பட்ட பல்வேறு மது வகைகள் படிப்படியாக சமூகத்தினை நோக்கி பரப்பிவிடப்பட்டுள்ளன.

மதுவிற்கு அடிமையாகி மதுப்பிரியர்களாக மாற்றம் பெற்றுள்ள பல்வேறு மனிதர்களை நாம் எமது சமூகத்தில் காண்கின்றோம். ஆரம்பத்தில் ஒரு மனிதனுக்கு மதுப்பாவனையானது அவனது நண்பர்கள் வட்டத்திலேயே ஏற்படுத்தப்படுகின்றது. நண்பர்கள் குழுவாக சேர்ந்து விழாக்களிலோ அல்லது ஏனைய களியாட்ட நிகழ்வுகளிலோ மதுவை பொழுதுபோக்காக உள்ளெடுக்கும் பழக்கம் படிப்படியாக அதிகரித்து அவர்களது மனதில் மது ஓர் முக்கியமான அம்சமாக மாற்றமடைகின்றது. இதனால் அவர்கள் மதுவிற்கு அடிமையான மனோநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி மதுவினை உள்ளெடுக்கும் அளவானது உலகளாவிய ரீதியில் அதிகரித்து செல்கின்றது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் தலா ஒருவரின் நுகர்வு வீதம் அண்ணளவாக 2.90 – 4.99 லீற்றராக இருக்கின்ற அதேநேரம் ஐரோப்பிய நாடுகளில் 12.50 லீற்றராக அதிகரித்து காணப்படுகிறது.(2005). ADIC (Alcohol and Drug Information Centre) இன் அறிக்கை வெளியீட்டின் படி பெரியளவில் மாற்றமடையக்கூடிய அபாயகரமான காரணிகளில் புகையிலை புகைத்தல் மதுப்பாவனை என்பன முக்கியமானவையாக குறிப்பிடப்பட்டுள்ளன. (Michael Engelgau, Kyoko Okamoto, Kumari Vinodhani Navaratne, and Sundararajan).

மதுவினால் ஏற்படும் பாதிப்புக்கள்

அதிகரித்த மதுப்பாவனை பல்வேறு வகையான விளைவுகளை மனித உடலில் ஏற்படுத்துவது மட்டுமன்றி சமூக பொருளாதார ரீதியிலும் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு மூலகாரணியாக விளங்குகின்றதுது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி ஒவ்வொருவருடமும் 15-29 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகளின் இறப்புக்களின் எண்ணிக்கை 320000 ஆகும். இவ்வெண்ணிக்கை இவ்வயதுப்பிரிவினரின் மொத்த இறப்பு வீதத்தில் 9% ஆகவும் காணப்படுகிறது. இலங்கையில் புகையிலை மற்றும் மதுபாவனையால் ஒருவருடத்திற்கு 40000 பேர் இறப்புக்களை சந்திக்கின்றனர்(Prof. Kalo Fonseka).

மதுவினால் ஏற்படும் பாதிப்புக்களினை உடல், உள, சமூக, பொருளாதார ரீதியான பாதிப்புகள் என்ற வகையில் நோக்கமுடியும்.

உடல் ரீதியாக ஏற்படுகின்ற தாக்கங்கள்

 ஈரல் பாதிப்பு
 சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற கோளாறுகள்
 இரத்தத்தில் ஏற்படும் அற்ககோலின் அதிகரிப்பினால் நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு கை கால்களில் நடுக்கம் ஏற்படல்.
 குருதி அமுக்கத்தில் ஏற்படுகின்ற ஏற்ற இறக்க மாற்றங்களினால் அதிக அளவில் வியர்வை வெளியேற்றம்.
 மாரடைப்பு ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகரிப்பு.
 பாலியல் சார்ந்த பலவீனங்கள் ஏற்படல்.

உளரீதியாக ஏற்படுகின்ற தாக்கங்கள்

 அதிகரித்த பதட்டம், பதகளிப்பு
 மனச்சோர்வு ஏற்படும்
 சந்தேக மனோநிலை
 இலச்சியமற்று மனம்போன போக்கில் வாழ நினைத்தல்
 சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டுதல்
 தற்கொலை எண்ணங்கள் மேலோங்குவதற்குரிய சாத்தியப்பாடுகள் அதிகரிப்பு
 பிறரை துன்பப்படுத்தி அதில் இன்பம்காணும் மனோநிலை ஏற்படல்.

சமூக பொருளாதார ரீதியாக ஏற்படுகின்ற தாக்கங்கள்

 சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்ற நிலை ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
 குடும்பங்களில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் பிரிவுகளும்.
 வறுமையும் போசாக்கு குறைபாடும்
 சேமிப்பு ஆற்றல் குறைவடைதல்
 வறுமை நச்சுவட்ட தொழிற்பாடு

தொடர்ச்சியான மதுப்பாவனையினால் வேலை செய்யும் ஆற்றல் நலிவடைந்து தனிநபர் உழைப்பு, சேமிப்பு கீழ்நிலைக்கு மாற்றமடையும். இலங்கையில் வறுமையில் வாழும் குடும்பங்கள் தமது மாத வருமானத்தில் 40% மான பகுதியை மதுவிற்கு செலவு செய்கின்றன. (Dr.Prabath Wickrama).

இவ்வாறாக உடல், உள, சமூக பொருளாதார மட்டங்களில் பாதிப்புக்களினை ஏற்படுத்தும் மதுபாவனையில் இருந்து மதுப்பிரியர்களினை மீட்டு அவர்களை சாதாரண மனிதர்களாக மீண்டும் சமூகத்திற்கு கையளிக்கப்படவேண்டிய தேவை அதிகரித்து வருகின்றது. மதுவின் அடிமைப் போக்கிலிருந்து அவர்களை மீட்பதற்கு மதுவினால் ஏற்படும் விளைவுகளினை விளக்கி தகுந்த உளவியல் ஆலோசனையுடன் கூடிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவது அவசியமாகும் இதற்காக அரச மருத்துவமனைகளில் மருத்துவ அலகுகள் இயங்கி வருகின்றன.

இவர்களுக்குரிய சிகிச்சைமுறையின் ஆரம்பத்தில் அவர்களுக்கு குறித்த அளவு மது வழங்கப்பட்டு படிப்படியாக வழங்கப்படும் மதுவின் அளவு குறைக்கப்பட்டுவரும் அதே நேரம் இரத்தத்தில் காணப்படும் Alcohol இன் அளவினை குறைப்பதற்குரிய மருந்துகளும் படிப்படியாக வழங்கப்பட்டு இறுதியில் மதுவை வெறுக்கவைக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். இந்நிலையில் சிகிச்சை பெற்ற நபர் மீண்டும் மதுவை அருந்தமுற்படும் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட மருந்துகளின் செயற்பாட்டினால் வாந்தி, தலைசுற்றல், அருவருப்பு உணர்வு என்பன ஏற்படும். இதனால் முற்றாக மதுவை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதோடு மதுவை மறந்த மனிதராக மாற்றமடையும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

வாழ்க்கைப் பயணத்தின் பாதையில் ஏற்பட்ட திசைமாற்றத்தினால் தம்மைத்தாமே சீரழித்துக் கொள்வது மட்டுமன்றி சமூக நலிவிற்கு பங்காளிகளாக மாற்றம் பெறும் மனிதர்களுக்கு நல்வழி காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமன்றி நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

எழுதியவர் : திவினோதினி (31-Mar-16, 3:05 pm)
சேர்த்தது : சர்மிலா வினோதினி
பார்வை : 1405

சிறந்த கட்டுரைகள்

மேலே