கல்மனக்காரி நகைத்தாள்
என்னவள் அல்வா செய்து
அன்புடன் சுவைக்கத் தந்தாள்
பொன்னிற வண்ணத் தோடு
மின்னிடும் எழிலைக் கண்டேன் !
பார்க்கவே எச்சி லூற
ஈர்த்ததே எந்தன் நாவை
கூர்முனைக் கத்தி யாலே
போர்புரிந் தேனே கூட !
தட்டுடன் சேர்ந்தே அல்வா
ஒட்டிய படியே வரவே
கட்டிய பல்லை மறந்து
பட்டெனக் கடித்து விட்டேன் !
வேகமாய் இழுத்துப் பார்த்தேன்
சாகசம் பலிக்க வில்லை
தேகத்தில் வலுவே யின்றி
சோகமாய் அவளைப் பார்த்தேன் !
மெல்கையில் ஒட்டிக் கொண்டு
பல்லதும் வந்து விடவே
சொல்லொணா துக்கம் கொண்டேன்
கல்மனக் காரி நகைத்தாள் !

