நிலைக் கண்ணாடி அசைகிறது சிமிட்டுவதை நிறுத்து

பெருமூச்சின் நிஷப்தங்களை
பின்னிக் கிடக்கும்
ஏதேன் காட்டுக்குள்
மீண்டும் கடவுள்
கொல்வோம்...!
-----------------------------------------------

குளிருக்கு கை நீட்டுகிறாய்...
நெருப்புக்கும்
உன் நளினம்...
-------------------------------------------------

எல்லா கோடிட்ட
இடத்திலும் உன் பெயரே
நிரப்புகிறேன்...
-----------------------------------------------

நிலைக் கண்ணாடி
அசைகிறது
சிமிட்டுவதை நிறுத்து...
-------------------------------------------------

எல்லாத் தெருவுக்கும்
ஒரு வீடு அடையாளம்...
உன் வீட்டுக்குத்தான்
தெருவே அடையாளம்...
-------------------------------------------------

நீ வந்த இறுதியாத்திரையில்
பூக்கள் எனக்கல்ல
உன் பாதங்களுக்கு...
-------------------------------------------------

உனைக் கடக்கையில் மட்டும்
எல்லா ஜன்னல்களிலும்
ரயில் கண்கள்...
-----------------------------------------------------

பிறகென்ன.... ஜன்னல் திற....
கூந்தல் பறக்கட்டும்...
புயல் தேசக் கனவோடு
வருகிறேன் பார்....
------------------------------------------------

இன்னொரு முறை
போடா சொல்...
வந்து விடுகிறேன்...
-----------------------------------------------

உன் தேன் குழையும்
மௌனத்தில்
கிரீச் கிரீச் செய்கிறது
என் நீர்மக் காடுகள்...
---------------------------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (5-Apr-16, 2:05 pm)
பார்வை : 127

மேலே