நிலவின் கவிதைகள் பக்கம் -01 --முஹம்மத் ஸர்பான்

ஒளியும் இருளும் கலந்த வானம்
மலரோடு பனியும் மோதும் தாகம்
நாணயக் குற்றி வடிவாய் இரவில்
மல்லிகைப் பூவொன்று மொட்டவிழ்கிறது
கன்னி நிலவுக்கு வானில் பெளணர்மி

இரகசியக் கவிதைகள் வாசிக்கின்றாய்
மெளனமாய் ஏதோ யோசிக்கின்றாய்
சமுத்திரங்களில் முகம் பார்க்கின்றாய்
கண்களை உன்னழகால் ஈர்க்கின்றாய்
கைக்குட்டை தருகிறேன் வெண்ணிலவே!
பட்ட திருஷ்டியை துடைத்துக்கொள்

தென்றலே கொஞ்சம் ஓய்ந்து நில்
நட்சத்திரப் பந்தலில் சிக்கிக் கொள்
சிக்குண்ட மேகங்களை கலைத்து விடு
வெட்கப்படும் வெண்ணிலவை உதிக்கச் சொல்

தூரிகை கொண்டு வரைந்த ஓவியமோ
காரிகை நேசம் கொள்ளும் காவியமோ
வையகத்தில் உன் போல் யாரழகு
உன் வருகையால் இலக்கணமும் பேரழகு
யாரைத் தேடுகிறாயோ
உன்னைத்தான் அழைத்தேன் வெண்ணிலவே!

கறுப்பின வண்ணம் வாழும் தேசத்தில்
ஓராயிரம் மின்னிடும் வெள்ளைக் கண்கள்
பளிங்கினால் கோபுரமாகும் கூளாங்கற்கள்
ஆயிரம் தான் இருந்தாலும் கலப்பிடமில்லாத
எழிலின் பிறப்பிடமும் அதிசயமும் நீ தான் நிலவே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (8-Apr-16, 11:15 am)
பார்வை : 132

மேலே