எனதருமை தங்கையே

(ஒரு தங்கையோடு அக்கா பேசும் இறுதி வாசகம்)


எனதருமை தங்கையே
இன்னேரம் சாப்பிட்டு தூங்கியிருப்பாய்
ஊட்டி விட என் கைகள் கேட்டு அடம்பிடித்து அழுதிருப்பாயா.?
சித்தி அடித்திருப்பாளா....?
தம்பியும் சேர்ந்து அழுதிருப்பானா...?
அப்பா எதையும் கவனிக்காமல் வாயில் சுருட்டோடு
விட்டத்தை பார்த்துக் கொண்டு மல்லாக்க படுத்துக்கிட்டிருப்பாரா..?
எனதருமை தங்கையே
நான் சாப்பிடும் நேரங்கள் தாமதமாகி
தொண்டைக் குழிக்குள் இரங்க மறுக்கிறது
அந்த சாப்பாடும்.,
யார் யாரின் பசிக்கோ தீனியாகிக் கொண்டிருக்கும் என் பசியறிய யாருமில்லை இங்கே..
நீ தூங்கி எழுந்து விளையாடித்திரியும்
நேரத்தை ஆறாக பிரித்து
அதில் ஒரு பங்குதான்
என் தூக்கத்திற்கு இரவலாக தரப்படுகிறது இங்கே...
எனதருமை தங்கையே அந்த தூக்கத்திலும் பாதியில் எழுந்து கொள்கிறேன்
ஊரிலிருக்கும் பொழுது உன் போர்வையை சரி செய்து விடுவேன்
நுளம்புக் கடியில் நீ அவதிப்படுகையிலும்...
அப்பா அரைப் பிணமாகத்தான் படுத்துக் கொண்டிருப்பார் இன்னமும்,
அந்த எண்ணத்திலே எழுந்து கொள்கிறேன்...

அக்கா அக்கா என்று
என்னையே சுற்றி சுற்றி வந்திருப்பாய்
நான் அங்கிருந்திருந்திருந்தால்
இப்பொழுதெல்லாம் அறிமுகமில்லா
முகங்களே என்னை சுற்றி சுற்றி வருகிறது...
சித்தி அடிப்பாள் என்ற பயத்தில்
ஓடிப்போய் வயல் வெட்டைக்குள்
மறைந்து விளையாடுவோம்...
இங்கு கணத்திற்கு கணம் பயம்
நிறைகிறது
என்னால் இந்த அறையை விட்டு
ஒரு ஜான் கூட நகர முடியவில்லை..
அப்பாவின் பீடி வாடையையே நுகரமுடியாதவளாய் விலகிப் போய் நின்றவள் நான்
இன்று பல வாடைகளுக்கு மத்தியில் ஜீவிக்கிறேன்
இதில் என் வாடை கூட எதுவென்று
மறந்து போய்விட்டது
கஷ்டப் பட்ட காலத்திலும்
என் சிரிப்புச் சப்தம் நிரம்பித் தழுவிய என் ஓட்டைக் குடிசை எங்கே
நான் அழுது அழுது கதற வேடிக்கை பார்த்து நிக்கும் இந்த ஏசி அறை நான்கு சுவர்களும் எங்கே..

என்னருமை தங்கையே..
காலன் கை பிடித்து கூட்டிப் போக அவசரப் படுகையில்
என் கையில் உன் கை பிடித்து
இறுக பற்றித் தந்தவள் உரக்க இழுத்த மூச்சில் அவள் பார்வை
சொன்னது " ஒரு சிறுத்தையிடம் தான் உங்களை காவல் விட்டுப் போகின்றேன்" என்று,
பசி வந்தாள் அது உங்களையும் தின்று விடும் என்ற அந்த பார்வை சொல்லலயே,
வயசு வந்தா வித்து காசாக்குமுன்னு...
உன்ன கூட்டிக்கிட்டு எங்கவாச்சும்
போயிருப்பேனே
நாலு பாத்திரம் தேச்சாச்சும்
வாழ்ந்திருக்கலாம்
உன் கூடவே இருந்திருக்கலாம்,

எனதருமை தங்கையே..
சித்தி உன்னை விட தம்பியைத்தான் அதிகம் கவனிப்பாள்..
நானிருக்கும் போதும் அதுதானே நடந்தது,
அதனால் அவனை வெறுத்து விடாதே அவன் நம் செல்லம்,
கை தவறி விழுந்த பாத்திரம்
நொறுங்கிய சப்தம் கேட்டு ஒடி
வந்தவள் ஆத்திரத்தில் வைத்த சூட்டில் என்னை விட அதிகமாய்
அழுதது அவனல்லவா...
அவனை பத்திரமாய் பார்த்துக் கொள்
என்னைப் போல அவனையும் நினைத்துக் கொள்
இரண்டு வயதுதான் வித்தியாசம்
உங்களுக்கு,
என் வயது வரும் போது
உன்னையும் கூலிக்கு விற்க
அப்பா சித்தி திட்டம் தீட்டினாலும்
அவன் உனக்கிருப்பான்
கவலைப் படாதே ...

எனதருமை தங்கையே.......
பதினெட்டு வயதடைந்த எனக்கோ
அண்ணணோ தம்பியோ அம்மாவோ அன்றில்லாமல்
போனதுதான் அப்பாவின் காசுக் காமத்தில் என் வாழ்க்கை கருகிப் போக காரணமோ,
ஒரே சேலை எத்தனை தடவை முற்களுக்கு இரையாகும்,
சின்னா பின்னமாய் சிதறடிக்கப் பட்டு
சிவப்பு விளக்குக்குள் சிறிது சிறிதாய் இறந்து கொண்டிருக்கும்
என் உயிரின் உதிரம்
இங்கே குவலை கணக்கில்
பருகப் படுகிறது...

எனதருமை தங்கையே
இதை நீ படிக்க முன்னமே
நான் இறந்து கூட போய் கிடக்கலாம்,
என் உடலைக் கூட உன் முன் நீட்ட மாட்டார்கள்.,
இறந்து கொண்டிருக்கும் போது யார் யாருக்கோ,
இன்று ஒரு ஏரிக்கரையிலும்
மலை உச்சியிலும் கழுகுக்கும்
நரிக்குமாய் என்னுடல் அங்கங்கள்
பிய்த்தெரியப் பட்டு
இரையாகியிருக்கும்.,

என்னுயிர் தங்கையே
என்னைப் போல நீயும் அப்பா இருக்கிறார் என்ற நம்பிக்கையில்
இருந்து விடாதே
நீயிருக்கும் நம்பிக்கையில்
வாழ்பவர் அவர்
உன்னையும் விற்று காசாக்குவார்
என்னருமை தங்கையே அப்பா இருக்கிறார் என்ற
நம்பிக்கையில் இருந்து விடாதே...
நீயிருக்கும் நம்பிக்கையில் வாழ்பவர் அவர்..

M.F.Askiya

எழுதியவர் : M.F.Askiya (8-Apr-16, 12:43 pm)
பார்வை : 124

மேலே