கவிதை தொக்கு- 1-கவிஜி
![](https://eluthu.com/images/loading.gif)
கொக்கு போல காத்திருக்கு வாழ்க்கை...
------------------------------------------------------------
கருப்பன் புள்ள
படிச்சா பொறுக்காது...
கருப்பு புள்ளைக்கு
தாலி கிடைக்காது...
வெறுப்ப சுமக்கும்
உருவத்துல வாழ்க்கை..
வேதாந்தம் பேசினவன்
இருபதிலேயே வழுக்கை...
நிலவுல என்னருக்கு
ஆராய்ச்சி நடக்குது...
ரேஷன் அரிசியில புழுவிருக்கு
ஆனாலும் திங்குது...
அத பூசு இதத் தின்னு
அத ஓட்டு இத மாட்டு
விளம்பரம் வீட்டுக்குள்ள....
வறுத்த முந்திரி
வளமை சுந்தரி
பணக்காரன் நோட்டுக்குள்ள...
கண்ணையாவ உள்ள போடு
மல்லையாவ வெளிய அனுப்பு
கோமாளிங்க நாட்டுக்குள்ள...
வயிறெரிஞ்ச தினக்கூலி
வாந்தியெடுத்தும்
மிதக்கறான் கோட்டருக்குள்ள..
பசி பட்டினி
பஞ்சமெல்லாம்
கொக்கு போல காத்திருக்கு...
இந்தியா சொத்து மட்டும்
பக்குவமா
சுவிஸ்ல இருக்கு...
இந்த செய்தி அங்க இல்ல
அந்த செய்தி இங்க இல்ல
செந்தமிழக் கொல்லறான்
செய்திக்காரன்....
முழிச்சா எப்பி... குளிச்சா எப்பி
சிரிச்சா எப்பி.... முறைச்சா எப்பி
என்னனென்னமோ செய்யறான்
தொழில் நுட்பக்காரன்....
ஒன்னும் புரியல... உலகம் தெரியல...
மண்ணாப் போறான் மனுஷன்...
மார்தட்டி நின்னு மணிக்கணக்கா பேசி
செத்தே போகுது வாழ்க்கை...
கவிஜி