வேண்டி நின்றோம்
பலவகை உணவுக்கு வேண்டவில்லை
ஒருவேளை உணவிற்கே வேண்டுகின்றோம்
பட்டாடை உடுத்திட வேண்டவில்லை
ஒற்றையாடை உடுத்திடவே வேண்டுகின்றோம்
ஆடம்பர மாளிகை வேண்டவில்லை
இளைப்பாற ஒருகுடிசை வேண்டுகின்றோம்
மண்ணிற்கு வந்தபோது அறியவில்லை
மனிதனாய் பிறந்தபோது உணரவில்லை
வாழ்க்கையே ஒருபெரிய வரமென்று
வாழ்தலே தலையாய கடமையென்று
சகமனிதன் வாழ்க்கைக்கு உதவவேண்டாம்
சமத்துவமாய் வாழ்ந்திட்டால் அதுபோதும்
எமைப்போல எல்லோருக்கும் சோகமுண்டு
அதைவெல்ல மனதிடத்தை கொடுத்துவிடு
எமைப்போல வாழவந்த மனிதருக்கு
பெருவளமும் உடல்நலமும் கொடுத்துவிடு
வேண்டுகின்றோம் வாழும்வரை உம்மைநோக்கி
வேண்டியதை கொடுத்திட்டல் தான்முறையே
பணிந்துநின்றோம் உம்பாதம் சரணடைந்தோம்
எல்லோரும் இன்புறவே வேண்டிநின்றோம்