காதல் அவசியமானது தான், எனினும் அமரத்துவமானது
காதல் செய்யுங்கள் என்று
இங்கே கட்டாயமில்லை.!
காதலிக்க யாரும்
கற்று கொடுப்பதில்லை.!
காதல் கண்ணசைவுகளின்
கணக்குப்பாடம், அதில்
எப்பொழுதுமே தப்பாய்
போவது மனக்கணக்கு தான்.!
ரசனைக்கு இடம் கொடுப்பதால்
காதல் இலக்கியமென்று இங்கு
யாரும் மெச்ச போவதில்லை.!
சுயநல முட்டுக்கட்டை
சிக்கலானால் கடன் வாங்கி
கழிக்க அது கணக்குமில்லை.!
உழுதவன் கணக்குப்பார்த்தால்
உழக்கு தான் மிஞ்சுமே அது போல
காதலித்தவர்களை கேட்டுப்பாருங்கள்
கனவும் நினைவும் மட்டுமே மிச்சமாம்.!
அழகானது அற்புதமானது என்றிருக்கும்
காதல் பின்னொரு நாளில்
சீ.சீ என்று புளித்தும் கூட போகும்.!
அடிக்கடி மனதுக்குள் வந்து
அன்ன நடையிட்டு அமரத்துவமாக்கும்,
அவரவர் வாழ்க்கைக்கு அச்சாரமிட்டு
ஆனந்த கீதமிசைக்கும்,
அது தானே காதல்.!