மகளே செல்வமே
இளன்சிவப்பாய் சின்னஞசிறு கால்களை உதைத்து
கண் திறவாது கெஞ்சலும் அழுகையுமாய் சிணுங்கி
என் மடி மீது ஆடவந்த என் மாணிக்கமே
என்னை தாயாய் மாற்றிய என் செல்வமே.
உன் விரல் நுனி அசைந்தாலும் உடல் சிலிர்த்து போவேனே
பாலூட்டி தாலாட்டி உன் ஒவ்வொரு அசைவையும்
நான் பிறந்த பயனை எய்தியதாய் களிபுற்றேனே.
நீ ஒவ்வொரு அடி எடுத்து வைத்து நடக்கையில்
கால் நோகுமோ பாதம் நோகுமோ என்று உன்
செவ்விரு பாதங்களை தடவி கொடுப்பேனே
என் துயர் யாவும் போக்கினையே என் முத்தே.
நான்கு வயதில் உன்னை பள்ளியில் சேர்த்தேன்
நீ பள்ளிக்கு சென்றிருந்தாலும் உன் மழலை சொல்
வீட்டில் எதிரொலிக்க இன்புற்றேன் என் மரகதமே
நீ வரும் வழி பார்த்து காத்திருந்தேன் நான்.
சீருடையில் நீ செல்லும் அழகு சொல்லி மாளாது
பூவாய் பூத்து நீ இருக்கும் இடமெலாம் மனம் வீசினாயே
கருவிழியை இமை காப்பது போல் உன்னை
என் அருகே வைத்து காப்பேனே என் புஷ்பராகமே!
பதின் பருவம் தாண்டி கல்லூரிக்கு நீ செல்கையில்
பாரதி கண்ட புதுமை பெண்ணாய் துணிந்து நில்
அச்சம் தவிர் தீமை கண்டு பொங்கிவிடு என்றேன்
நம் வீட்டு பவழக் கொடியே படர்ந்து செல் என்றேன்
உடல் உரம் மன உரம் கொண்டு வெற்றி கொண்டு
பணிநிமித்தம் என்னை விட்டு வேரூருக்கு சென்றாயே
உயிர் போகாமல் கைபிடித்தே நீ வரும் வரை காத்திருந்தேனே
வைரமாய் உன்னை தூரத்தில் பார்த்து களிப்புற்றேனே .
மன தெளிவோடு மனித நேயத்தோடு வைடூர்யமே
நீ ஆற்றும் சமூக பணிகளையும் வியந்தே பார்க்கிறேன்
உன்னை தாண்டி ஒரு உலகம் அதில் துயருறும் உயிர்கள்
அவர்களுக்கு நீ உன்னால் இயன்ற உதவிகளை செய்கிறாயே
அமைதியாய் கவனமாய் சூழ்நிலையை நீ அணுகும்போது
உன் பக்குவம் உன் வயதில் எனக்கில்லை என்பதை
நினைக்கையில் வெட்கி தலை குனிகிறேன் என் நீலமே
இன்னும் என்ன செய்ய இந்த நாட்டுக்கு என்று நீ
நினைத்து நாட்டின் நலம் காக்க ராணுவத்தில்
சேர முடிவேடுத்தாயே என் கோமேதகமே
உன் மனதிடத்தை பாராட்டினாலும் மனதின் ஓரத்தில்
ஒரு சோகம் நிலைகொண்டு இருக்கும் நீ வரும் வரை
உன்னை நான் பார்க்கும் வரை... என் செல்வமே.