அம்மாவுக்கு

ஊருக்குள்ள கவிஞன்னு பேரெடுத்த!
உனக்காக ஒரு கவிதை நானும் எழுதவில்ல!
பத்துமாதம் சுமந்து பெத்த ஆத்தாவே!
உன்ன பத்தி நானும் பாடாம போவேனோ?

நானு வெளிச்சத்த பாக்கணும்னு ஆசப்பட்டு!
அந்த இடுப்பு வலி யாவையும் பொறுத்துகிட்ட!
இராத்திரியில் நித்திரைய நீ தொலைச்சி!
பத்திரமா என்னையும் தான் பாத்துகிட்ட!

எறும்பு மேல ஊர்ந்தாக் கூட நோகுமுன்னு!
உன் முந்தானையில் எனக்காக தூளி தந்த!
ஆனா ஆவன்னா படிச்சதில்ல!
ஆனாலும் எனக்காக பாட்டிசைச்ச!

நீ பத்து நாளு சாப்புடாம இருந்தாலும்!
பச்சப் பால் வாசம் நான் மறந்ததில்ல!
சின்ன சின்ன காசு கூட சேர்த்து வச்சி!
என்ன சிங்காரிக்க அலங்காரத்துக்கு செலவு செய்த!

மூணாவது எச்சிப் பால் எனக்கு தந்த!
பாசத்த மட்டும் ஏனோ கொட்டி தந்த!
குடும்பம் வறுமையில இருக்குதுன்னு ஊர் அறியும்!
அந்தக் கஷ்டத்த ஒரு போதும் நா பட்டதில்ல!

உலக நீதி நானு கொஞ்சம் அறியணும்னு!
கஷ்டபட்டு கான்வென்டில் படிக்க வெச்ச!
கீழ்சாதி மேல்சாதி நமக்கில்லனு!
ஏழபட்ட பசங்க கூட பழக வச்ச!

நகைநட்டு யாவையும் அடகு வச்சி!
அப்படி தான் நீயும் என்ன படிக்கவச்ச!
ஊரு கண்ணு என்மேல பட்டுதுன்னு!
திருஷ்ட்டி பொட்டு தான நீயும் எனக்கு வச்ச!

அடிமேல அடிவச்சி நடக்கவச்ச!
என்ன ஆளாகத் தான நீயும் ஆக்கிவச்ச!
என் வயிறார சாப்பிட்ட மிச்சத்துல!
உன் வயித்து பசி தீந்ததுன்னு மெச்சிக் கொண்ட!

பத்து மாதம் சுமந்தது மட்டும் போதுமுன்னு!
என்ன பத்திரமா தரமேல இறக்கி வச்ச!
ஒத்த வழி பாதை இந்த கருவறையோ?
மீண்டும் அங்கு போக ஒரு வழியுண்டோ?

மண்ணுக்குள்ள கூடுகூட கரைவதுண்டு!
நெஞ்சு மட்டும் துடிச்சிக்கிட்டே இருக்குதம்மா!
துடிக்கும் சத்தம் உன்னில் கேட்கலையோ?
அம்மா என்னை மீண்டும் ஒரு முறை சுமப்பாயோ?!!

எழுதியவர் : இரா.உமாசங்கர் (13-Apr-16, 7:51 am)
Tanglish : ammavuku
பார்வை : 395

மேலே