கவிதை தொக்கு - 5 - சந்தோஷ்

இயக்குனர்.
----------------------


இது மாய உலகு
நானொரு மாயன்
உன்னை ஆட்டிப்படைக்கும் மந்திரன்
உன் ஆழத்தில் கிடக்கும் இறைவன்

ஜாதி, மதம்,மொழி , இனமென
எதுவும் எனக்கில்லை.
மாறாக.. உன்னால்
நான் கற்பிக்கப்படுகிறேன்
ஆதலால்
நான் களங்கப்படுகிறேன்.

உன்னை உனக்கே எழுதும்
நானொரு விடுகதையே.
உன்னைச் சுற்றி நிகழும்
யாவும் எனது இயக்கமே.
உனது அறிவியலுக்கும்
உன் உலக உளவியலுக்கும்
விளங்காத நானொரு
புரியாத புதிரான திரைக்கதையே.

யாரென எனை நீ கேட்காதே
உன் பூத உடல்
காற்றில் இயங்கும்.
உன் பூத உடலில்
நான்
காலத்திற்கு இயங்குகிறேன்.

உன் மரணத்திற்கு பின்பு
உனக்கு கல்லறை
எனக்கு விடுதலை.

உன் வாழ்வு நிகழ்வு
வெளிச்சத்தை தின்றுச்செரிக்கும்
நானொரு இருட்டுச் சிற்பி..!
நான் உன் கனாக்கால கவிதை..!
நான் உன் வினாக்களுக்கான விடை..!

ஆம்.. ஆம்.. ஆம்.....
நானுன் ஆழ்மனம்

**

இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (14-Apr-16, 12:50 pm)
பார்வை : 142

மேலே