முகமூடி
நான் வேஷமிட்டால்
தான்
மதிக்கிறார்கள்
தினமும் கைவசம்
பல முகமூடிகளை
கொண்டே செல்கிறேன்
நல்ல நடிகன்
தான் இங்கு
தேவைப்படுகிறான்
உத்தமர்களை எல்லாம்
பாடசாலை புத்தகத்தில்
உறங்க வைத்து
இருக்கிறோமே
தப்பி தவறியும்
யார் வழியேனும்
விழித்து விடாமலிருக்க
மயக்க மருந்துகளை
கைவசம் வைத்திருக்கிறோம்
கண்ணாடி காலையிலேயே
அருவருப்பான
உண்மை முகத்தை
காட்டுகிறது
பிடிக்கவில்லை உடனே
அழகு சாதனம்
கொண்டு
போலிக்கு மாறிவிடுகிறேன்
பிறருக்காக முகமூடி
எடுத்தேன் இன்று
எனக்கே தேவைப்படுகிறது
நான் சிறந்த நடிகனாகவே
விரும்பிவிட்டதால்