காதல் கூட குற்றமாச்சு

சாதனைகளின் குடிசைக்குள்
சாதிகளின் குடியேற்றம்
இனி வரும் காலத்தில்
இல்லாது முடியட்டும்

ஆன்மீக பூமியிலே
அறியாமை புகுந்ததடா
அதன் அனா ஆவன்னா
அறியாமல் போனதடா

ஏட்டினிலே வடித்ததெல்லாம்
எங்கெங்கோ போனதடா
ஏனைய ஏடுகளில்
பிரிவினைகள் புகுந்ததடா

பொதுவான கடவுளையும்
சொந்தம் கொள்ள ஓர் ஜாதி
பொதி சுமக்கும் கழுதை போல
அடிவாங்க ஒரு ஜாதி

நீரும் காற்றும் வருகையிலே
தீண்டாமை பார்ப்பதில்ல
நீயும் நானும் வருகையிலே
தீட்டு என்றால் என்ன சொல்ல

காதல் கூட குற்றமாச்சு
செய்தவரை வெட்டியாச்சு
உயிர் வாங்கி சாய்ப்பதில் தான்
உயர் ஜாதி தெரிந்திடுமா
உதிரும் அந்த உதிரத்தில்
நிறமாற்றம் வந்திடுமா

மதம் பிடித்த யானை போல
மதம் பிடித்து அலைவது ஏன்
அவர் வழியில் இவர் வந்து
தன் மூக்கை விடுவது ஏன்

எம்மதமும் சம்மதமாய் இருந்தால்
தெய்வ பிறப்பு இல்லை
உம் மதத்தை உம்மோடே வைத்துக்
கொண்டால் சிறப்பு

மதம் என்றால் வழி என்று
பொருள் தருகிற ஒன்று
எவ்வழியோ போய் சேர்ந்தால்
அடைகிற இடம் ஒன்று

வழிச்சண்டை எதற்கய்யா
வழிவிட்டால் நலமய்யா
பழிச் சொல்லி வீழாது
வழிச் சொல்லி வாழ்ந்திடலாம்

ஒன்றே நம் குலம்
அறிந்தால் தான் நலம்
வேற்றுமைகள் மறப்போம்
வேதனைகள் துறப்போம்

சமாதான நீர் கொண்டு
சமத்துவத்தை நடுவோம்
சகோதரத்துவ மலர் ஒன்று
மலர்ந்திட வழி கொடுப்போம்

எழுதியவர் : கவியரசன் (21-Apr-16, 2:28 pm)
பார்வை : 143

மேலே