நீர் இன்றி அமையாது உலகு

கோடை வெயிலில் விரல்கள் கொப்பளிக்க
வறண்ட பூமி வேன்கதிர்களை பிரசவிக்க
பூட்டிய கலப்பையில் என் காளைகள் மூச்சிரைக்க
கானல்நீர்ப் பாதையில்
தேடலானேன் நீர் தேடி
இதோ என் முப்பாட்டன்
பெயர் சொல்லும் மரம் இது
இன்று தான் விலை முடித்தேன்
என் இல்லம் அலங்கரிக்க...
கட்டுவித்தவன் இட்டு வைத்த மாமரமே
காடுவித்தவன் தொட்டு நிற்கும் பூமரமே
உன்னை தொட்டு நிற்பவன் பாவி என
அறிந்தும் அறியாததுமாய்
கொடும் வெயிலில்
நீ வியர்த்து
நீர் பெயர்த்து
எனக்கு நிழலும் தந்து
என் தாகம் தீர்த்தாய் நீ...
என் தாகம் தீர்த்த தாய் நீ...
அம்மையே அப்பனே
சுயம்பாய் அருளிய இயற்கை இறையே
நீர் இன்றி அமையாது உலகு,
நீர் அருளும்,
நீர் இன்றியும் அமையாது உலகு...
வாசகமாகிய வரிகள் இனி
சுவாசமாகட்டும்...