நம்மை தேடி வருமோ

நான் நயமானவன் நாணயமானவனா?
என்னிடம் நாணயமுண்டு நாணயம் உண்டா?
பண நாணயம் இருப்போருக்கே மதிப்பு
குண நாணயம் கொண்டவருக்கு மிதிப்பு

கல்வியிலும் நீதியிலும் நாணயம் விளையாடுது
திருமணத்தில் மருத்துவத்தில் நாணயம் சதிராடுது
காவலிலும் அரசியலிலும் நாணயமே முதலிடம்
நாணயம் இல்லையென்றால் கிடைப்பதென்னவோ கடைசியிடம்

உள்ளவனுக்கு மட்டுமே வாசற்படியில் எல்லாம்
இல்லாதவனுக்கு என்னவோ கிடைப்பதில்லை எதுவும்
நாணயம் உள்ளதெனில் நம்கதையும் விற்கும்
நாணயம் தீராதது நமையெல்லாம் தீர்த்துவிடும்

நாணயத்தை தின்று ஏப்பம்விடவா முடியும்
நாணயத்தை வென்று சாதிப்பவர் எவரோ
நாணயத்தை விட்டு நம்நயத்தை வளர்த்தால்
நாணயமே கூட நம்மைதேடி வருமோ..?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 9:06 am)
Tanglish : nammai thedi varumo
பார்வை : 1041

மேலே