இவள் என்ன ரதியோ

கனவிலே பெண்ணொன்று இன்றிங்கு கண்டேன்
இணையிலா அவளழகைக் கண்டே வியந்தேன்!
முற்றும் அதை சொல்லுரைக்க முடியாது எனினும்
சற்றேனும் சொல்லியோர் கவிதை படிப்பேன்.

கருங்குழல் கரையிட்ட பிறை நுதல் நெற்றியோ?
மருங்கினிரு மந்தார இலையொத்த மடல்களோ?
மருளும் மான் விழிபழிக்கும் கருநீலக் கண்களோ?
மருவற்ற முகம் நடுவில் விரிந்த நீள் நாசியோ?

சிருங்கார ரசம் சிந்தும் சிந்தூரச் செவ்விதழ்கள்
விருந்துண்ண வாவென்று வரவேற்கும் கனியோ?
மின்னலென இதழ்.இடையில் மின்னும் ஒளிக்கீற்று
புன்னகையோ , கோத்தெடுத்த நல்முத்துச் சரமோ

கன்னக் கதுப்புமாங் கனிதந்த மொய்யோ ?
எண்ணரும் எழில் முகம்., இது என்ன மெய்யோ?
ஒளிர் வெண்ணிறம் கொண்ட சங்கே கழுத்தோ?
தளிர் மூங்கிலே அவள் தோளோ நீள் கரமோ?

மங்காத தங்கமென ஒளிர்ந்திடும் அங்கை
தெங்கினிள நுங்குகளோ மங்கையவள் அங்கம்.
மிளிர் மேகலை அணிந்த இடையோ அது கொடியோ?
இடையதனின் எடைதாங்கி நிற்கும்பொற் குடமோ?

நெடுதுயர்ந்த கால்களும் செவ்வாழைத் தண்டோ?
சிலம்பணிந்த பொற்பாதம் நிலம் பூத்த மலரோ ?
அங்கயற்.கண்ணியள் திங்களின் தங்கை?
எங்கும் நான் இதுவரை காணாத நங்கை!

மதனையும் மயக்கிடும் இவள் என்ன ரதியோ?
நிதம் எண்ணி யேங்குதல் ஆடவர் விதியோ?

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (24-Apr-16, 9:19 am)
பார்வை : 75

மேலே