நானே சிக்கிகொண்ட சிக்கல்

நானே சிக்கிகொண்ட சிக்கல்

கடைத்தெருவில், வரிசையாய் அமைந்திருந்த கடைகளில் வலது ஓரமாய் இருந்த சிறு எலக்ட்ரானிக் கடை “ஜனாப்” என்பவன் கடையை நடத்தி வந்தான். அவனது பல பொருட்கள் “கடத்தலில் வந்தவை” என்று ஊருக்குள் ஒரு பேச்சு.
எங்கள் தெரு உட்பட சுற்று வட்டாரங்களில் இந்த செய்தி பரபரப்பாக ஓடி கொண்டிருந்தது.
இது எங்கள் தெரு மட்டுமல்ல, அக்கம் பக்கத்து தெருக்களிலும் கிசு கிசுவென பேசிக்கொண்டிருக்கும் சமாச்சாரமாகி விட்டது.அதை விட காவல் துறையின் கண்காணிப்பில் அவன் கடை இருப்பதாகவும் எந்நேரமும் அவன் கைது செய்யப்படலாம் என்றும் பேசி கொண்டிருந்தனர்.
இதை நான் ஏன் இவ்வளவு விலாவாரியாக சொல்லுகிறேன் என்றால், ஜனாப் என் நண்பன், என்னுடன் ஒன்றாம் வகுப்பில் இருந்து இதே ஊரில மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இருந்து படித்தவன். அவன் தந்தை அந்த கடையை நடத்தி கொண்டிருந்தார் அப்பொழுது.
பத்தாவது படிக்கும்பொழுது அவன் தந்தை இறந்து விட இவன் குடும்பத்து பாரத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டான். படிப்பை நிறுத்தி விட்டு அந்த கடையை பார்த்து கொள்ள ஆரம்பித்து விட்டான்.
இளைஞனாக இருக்கவும், சீக்கிரமே நெளிவு சுழிவுகளை கற்று தேர்ந்து விட்டான். நிறைய பொருட்கள் அவனது கடையில் குவியலாயிற்று. நன்கு தெரிந்தவர்களுக்கு தவணை முறையில் கூட கொடுக்க ஆரம்பித்தான்.
நானும் “பிளஸ் டூவிற்கு” அப்புறம் படிப்பை தொடரமுடியாமல் ஒரு ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டேன். இவனை அவ்வப்பொழுது வேலை முடிந்து வரும்போது அவனது கடையில் பார்த்து பேசிக் கொண்டிருக்கும் பொழுதுதான் என் வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது? என்று கேட்டு எதுவுமே இல்லை என்று தெரிந்து கொண்டவன் “தொலை காட்சி” பெட்டியில் இருந்து “அயர்ன்பாகஸ்” என்று ஒவ்வொன்றாக தவனை முறையில் கொடுத்து வீட்டை நிறைக்க செய்து விட்டான்.
நானும் கூடுமான வரையில் தவணைகளை ஒழுங்காக கொடுத்து வந்ததால் நிறைய தள்ளுபடியும் செய்து கொடுத்தான்.
இதெல்லாம் இப்பொழுது எதற்கு சொல்கிறாய்? என்று கேட்கிறீர்கள், சரிதான், இவனிடம் தவணை முறையில் வாங்கியதற்கு என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருப்பதால் நான் அதை பற்றி கவலைப்படவில்லை. ஆனால்..!
மூன்று மாதங்களுக்கு முன்னால் அவனிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எனக்கு செல்போனில் ஒரு அழைப்பு, எடுத்து பேசினேன். அவன் நான் செல்போனில் பேசுவதை கேட்டு கொண்டிருந்தவன் பேசி முடித்தவுடன் அதை வாங்கி பார்த்தான்.
அது பழைய காலத்து செல், இந்த ஜீ ஒன்று,இரண்டு மூன்று நான்கு எதுவுமே வராத காலத்து போன். அதை வாங்கி அப்புறமும், இப்புறமுமாய் திருப்பி பார்த்தவன் இதைத்தான் வைத்து கொண்டிருக்கிறாயா? இன்னும்.
நானும் தலையாட்டினேன். அவன் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு, நாளைக்கு சாயங்காலம் இந்த இடத்துலயே நில்லு, நல்ல போன் ஒண்ணு நான் கொண்டு வந்து கொடுக்கறேன்.
வேண்டாம் என்று சொல்ல வாயெடுத்தாலும், மனசு தடுத்தது. என்னை பற்றி அவனுக்கு தெரியும், அதிக விலையும் சொல்ல மாட்டான், பணம் உடனே கொடுக்க சொல்லி வற்புறுத்தவும் மாட்டான். வெறுமனே அவனை பார்த்து நின்றேன்.
புரிஞ்சுதா, இதே நேரம் நில்லு, நான் கிளம்பறேன், வண்டியை திருப்பி கொண்டு பறந்து விட்டான்.
மறு நாள் அவன் என் கையில் கொடுத்த போனை கண்டவுடன் அசந்து விட்டேன். புத்தம் புதிய போன் அதுவும் “ஆண்டிராயிடு” என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட போன். அதை வாங்கி தொட்டு பார்த்து தடவி மகிழ்ந்தேன், மனதுக்குள்தான்.
புடிச்சிருக்கா? என் தவிப்பை பார்த்து கேட்டான், தலையாட்டினேன். சரி சீக்கிரமே “சிம்” கார்டு வாங்கி உபயோகப்படுத்து, சொல்லி விட்டு பறந்து விட்டான். காசு எவ்வளோ? நான் மெல்ல கேட்டதை காதில் வாங்காமலேயே.
இதுதான் என் சிக்கலுக்கும் பயத்துக்கும் காரணம், இது வரை அந்த போனை பற்றி அவன் விசாரிக்கவும் இல்லை, பணத்தை பற்றி பேசவும் இல்லை. நான் இப்பொழுது இந்த போன் இல்லாமல் இருக்க முடிவதே இல்லை என்னும் நிலைமையில் தவிக்கிறேன்.
மனதுக்குள் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள், ஒருவனை ‘கடத்தல்காரன்’ என்று சந்தேகிக்கிறார்கள், அவனிடம் நான் ஒரு பொருளை வாங்கி இருக்கிறேன், எந்த சாட்சியுமின்றி.
காவல்துறை அவனை கைது செய்து கடத்தல் பொருட்களை யார் யார் வாங்கினார்கள்? என்று கேட்டால் அவன் என் பெயரையும் அல்லவா சொல்வான். பிறகு காவல்துறை என்னையும் விசாரிக்க அழைக்குமே. கடவுளே..
அன்று இரவு எட்டு மணிக்கு மேல் இருக்கும், நான் வேலை செய்த ஜவுளி கடையை விட்டு பணி முடிந்து வெளியே வந்தவன் கடை வீதி தாண்டித்தான் என் வீட்டிற்கு செல்லவேண்டும். கடைவீதி பரபரப்பாக இருந்தது.
என்ன விசயம்? அங்கு நின்றிருந்தவரிடம் விசாரித்தேன். ஜனாப் கடைக்கு போலீஸ் வந்துச்சாம், ஏதோ அவனை விசாரிச்சுட்டு கூட்டிட்டு போயிட்டாங்க,
அவர் சொல்வதை கேட்டதும் என் உடம்பு முழுக்க “ஜில்லிட்டு” விட்டது, ஐயோ நாம் நினைச்சது நடந்துடுச்சு, போச்சு, போச்சு, பயத்தில் நடுங்கியபடியே எப்படித்தான் வீடு வந்து சேர்ந்தேனோ தெரியவில்லை.
மறு நாள் எழுந்திருக்க முடியவில்லை, குளிர் காய்ச்சல் வந்தது போல் இருந்தது, வேலைக்கு போகவே பிடிக்கவில்லை, கடைக்கு லீவு போடலாமா? இல்லையென்றால் கடைக்கே போலீஸ் வந்து என்னை அடித்து அழைத்து செல்வார்களே, அதை எல்லாரும் வேடிக்கை பார்ப்பார்கள், அதற்கு பிறகு கடை முதலாளி என்னை வேலைக்கு வைத்து கொள்வாரா? மனம் என்னென்னமோ நினைத்தது.
நான் இன்னும் வேலைக்கு கிளம்பாமல் அங்கும் இங்கும் அலைவதை பார்த்த அப்பா, என் முகத்தை பார்த்து என்னடா முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு?
அவர் ஒரு கம்பெனியில் கணக்கு வழக்கு எழுதி கொண்டிருப்பவர், பத்து மணிக்கு போனால், இரவு பத்துமணிக்குத்தான் வருவார். நான் சம்பாத்தியத்துக்கு வந்த பின்னால் அவர் கொஞ்சம் தைரியமாகியிருந்தார். எனக்கு பின்னால் ஒரு தம்பி தங்கை என்று இருப்பதால், அவருக்கு உண்மையிலேயே நிம்மதி ஆகியிருந்தது.
அவரிடம் மெல்ல நான் “ஜனாபிடம்” செல்போன் பெற்றதையும், போலீஸ் வந்து அவனை விசாரித்து கூட்டி சென்றதையும் சொன்னேன்.
அப்பா திட்டினார், உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? எத்தனை செல்போன் கடை இருக்கு, அங்க எங்கியாவது வாங்கி தொலைக்க வேண்டியதுதானே.
அப்பாவின் பேச்சு எனக்கு வருத்தமளித்தது, இது வரை அவன் கடையில் இருந்து “எலக்ட்ரானிக்” பொருட்களாக வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த போது, அவனையும் என்னையும் பாராட்டி சிரித்து வாங்கியவர் இப்பொழுது ‘அவனுக்கு சிக்கல்’ என்றவுடன் திரும்பி கொள்கிறார்.
சிறிது யோசித்தவர், எனக்கு தெரிஞ்ச தலைவர் ஒருத்தர் இருக்கறாரு, வா, அவரை போய் பார்க்கலாம்.
அப்பாவும் நானும் அவரை பார்த்தோம், நான் சொன்ன கதையை கேட்டவர், எங்கள் இருவரையும் அழைத்து கொண்டு அந்த ஸ்டேசனில் பணி புரிந்த ஒரு காவலரை பார்த்தார். சற்று நேரம் எங்கள் இருவரையும் வெளியே நிற்க சொன்னார் அந்த காவலர்
அவரும் தலைவரும் தங்களுக்குள் இரகசியமாய் பேசி கொண்டவர்கள், வெளியே வந்து அப்பாவிடம் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்கள், நான் எல்லாம் பேசி முடிச்சிட்டேன். அவங்க தம்பிய கூப்பிட மாட்டாங்க. அப்பா கையில் கொண்டு வந்திருந்த ஆயிரம் ரூபாயை என்னை முறைத்தபடியே அவரிடம் கொடுத்தார்.
அப்பாடா.. நிம்மதியுடன் வேலைக்கு சென்றேன், இரவு எட்டு மணிக்கு பணி முடிந்து கடை வீதி வழியாக வந்தேன். அவன் கடையில் இரு போலீஸ்காரர்கள் உட்கார்ந்திருந்ததை பார்த்ததும் எனக்கு உடல் உதற தொடங்கியது. மெல்ல நகர முற்பட்டேன்.
“டேய் ரஹீம்” சத்தம், திரும்பி பார்க்க ஜனாப்தான் கை தட்டி என்னை அழைத்தான். என் உடம்பு தானாக மயக்க நிலைக்கு போக ஆரம்பித்து விட்டது. ஓடி விடலாமா? மனசு பரபரத்தாலும் கால்கள் நகர மறுத்தன.
நான் திகைப்பாய் நிற்பதை பார்த்தவன் வேகமாக கடையை விட்டு வெளியே வந்து என் தோள் மீது கையை போட்டுக்கொண்டு வாடா, ஏன் அப்படி மரம் மாதிரி நிக்கறே, அணைத்தபடியே அழைத்து சென்றான்.
சார் இவன் என் பிரண்டு, பேரு ரஹீம், இவன் கிட்ட ஒரு செல்போன் கொடுத்திருக்கேன், அதை பாருங்க, உங்களுக்கு ‘புடிச்சிருக்கான்னு’ சட்டென என் சட்டை பையில் கையை விட்டு செல்போனை எடுத்து அவர்களிடம் கொடுத்தான்.
அவர்கள் வாங்கி பார்த்து விட்டு “சூப்பர்” நல்லாயிருக்கு, எவ்வளவு ஆகுது?
எல்லாருக்கும் பனிரெண்டுக்கு கொடுக்கறேன், கம்பெனி பொருள் சார், என் மச்சினன் கடையில இருந்து வாங்கி கொடுக்கறது, “பில்” வேணுமுன்னா கொஞ்சம் விலை அதிகமாகும், என்ன சொல்றீங்க?
ஏம்ப்பா எங்க ஸ்டேசன்ல வேலை செய்யறவங்க மொத்தமா ஆறு செட் வாங்குனா, விலைய குறைக்க மாட்டீங்களா?
கண்டிப்பா சார், ஒரு உண்மைய சொல்லட்டுமா? இந்த ‘செட்டே’ என் பிரண்டுக்கு சும்மாதான் கொடுத்தேன், அவன் இதுவரைக்கும் எங்கிட்ட பொருள் எடுத்து சரியா தவணை கட்டி நியாயமா நடந்துகிட்டிருக்கான். இந்த செட்டை நான் விக்கற ‘டிவி கம்பெனிகாரங்க’ எனக்கு கிப்டா கொடுத்தாங்க, நான் என்னோட கஸ்டமருக்கு கொடுத்தேன்.
நீங்க கரெக்ட்டா மாசா மாசம் தவணைய கொடுத்து, பொருளை வாங்கிட்டிருந்தீங்கன்னா, உங்களுக்கும் இந்த மாதிரி கம்பெனி கொடுக்கற ‘கிப்டை’ நானே கொடுப்பேன்.
நான் வாயை பிளந்து ஒரு வித அதிர்ச்சியாய் அவன் பேசுவதையும், கடைசியில் அவர்கள் விடை பெற்று செல்வதையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.
நேத்து உன் கடையில போலீஸ் வந்துச்சுன்னு சொன்னாங்க,
அவன் என் தோளை அணைத்தபடி நேத்து சரியான பிசினஸ்” ஸ்டேசன்ல பத்து பேருக்கு மேல போன் வேணுமின்னு கேட்டிருந்தாங்க, அவங்க மொத்தமா கம்பெனியில இருந்து எடுத்தா எவ்வளவு லாபமுன்னு கேக்கறதுக்கு என்னை கூப்பிட்டு போனாங்க.
சரி வா சூடா டீ சாப்பிடலாம், என்னை அணைத்து கொண்டே பக்கத்தில் இருந்த கடைக்கு கூட்டி சென்றான்.
யாரை குறை சொல்வது, என் அவசரகுடுக்கையையா? அல்லது மக்களின் வதந்தியையா? அப்பாவின் அவசரத்தையா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Oct-24, 2:03 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 35

மேலே