அல்லாடுது

அல்லாடுது...!
01 / 10 / 2024

எதை எழுதுவது? எதை விடுவது?
புரியவில்லை.
இதை எழுதினால்
அதற்குப் பிடிப்பதில்லை.
அதை எழுதினால்
இதற்குப் பிடிப்பதில்லை.
இதற்கு பயந்தே
உண்மைகள் இங்கு
எழுதப் படுவதுமில்லை.
மனதிற்குள் இருக்கும்
மர்மங்கள் இங்கு
எழுத்துருவம் கொண்டு
பிறந்து வருவதுமில்லை.
எல்லோருக்கும் பிடித்தாற்போல்
எல்லோரையும் சமாதானப்படுத்தி
மகிழ்வுற செய்வதுபோல்
எழுத முடியுமா?
எதை எழுதுவது? எதை விடுவது?
குழப்பம்தான் மிஞ்சியது.

புரட்சிக் கவி
ஆயிரத்தில் ஒன்று வெடிக்கும்.
சமுதாய சிந்தனை
சிலதில் சிந்தனையைத் தூண்டும்.
சிற்றின்பக் குப்பையாய்
பலதில் இளசுகளைக் கெடுக்கும்.
புதுக் கவிதை என்று
புதுமைகள் படைக்கும்.
மரபுக் கவிதை என்று
வரம்புக்குள் அடங்கும்.
கானாப் பாடலென்று
விசிலடித்து குதிக்கும்.
எதை எழுதுவது? எப்படி எழுதுவது?
பட்டிமன்றம்தான் நடந்தது.

உணர்வுகள் மூட்டும்
தீயதை
மனதில் தளும்பும்
காதலை
உலகத்தை ஆளும்
தமிழை
தமிழில் தமிழால்
எழுதிவிடத் துடிக்கிறேன்.
எதை எழுதுவது? எதை விடுவது?
இதயம் கிடந்தது அல்லாடுது.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (1-Oct-24, 9:13 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 30

மேலே