பல்லாங்குழி

ஐந்தந்துப் பரலாக பதினான்கு குழியிலிட்டு
ஓரைந்தில் ஆரம்பித்து ஒவ்வொன்றாய் பகிர்ந்துயிட்டு
வெற்றுக்குழி வந்தால் துடைத்தடுத்த செல்வம்சேர்த்து
நான்குபரல் சேர பசுவென்றே தனதாக்கி
நாளும் பொழுதும்நம் மண்ணிலாடிய விளையாட்டு
பண்டைய காலம்தொட்டு தொழில்நுட்பம் வராதவரை
பெண்டுகள் ஆடியது மதிவளர உதவியது
இன்றெங்கே போனதுவோ எனதன்பு பல்லாங்குழி
தேடுகிறேன் தேடுகிறேன் ஊரெல்லாம் தேடுகிறேன்
எகிப்தின் கல்வெட்டில் உந்தன் உருவமுண்டு
பழங்கால சிற்பங்களில் உன்வடிவம் தானுண்டு
தாய்வீட்டு சீதனமாய் அன்று வாழ்ந்திருந்தாய்
இன்றோ எங்குபோனாய் இத்தலைமுறை பிடிக்கலையோ
மீண்டு வருவாயோ உன்மூச்சைப் பெறுவாயோ
வேண்டி நிற்கிறேனே எங்களோட சாமிக்கிட்ட.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 9:35 am)
பார்வை : 1305

மேலே