உழைப்பாளி - மே தின எழுத்துக் கவிதைப் போட்டி
"தானன தந்தன தானன தந்தன
தானன தானனானா"
என்ற வண்ண மெட்டுச் சிந்துப்பா !
சாலைகள் செய்தருஞ் சோலைக ளாக்கியே
---சாதித்த தாருடைக்கை ? - எங்கும்
ஆலைகள் தோறுமே வேலைகள் செய்திடும்
---அன்புடைத் தோழரின்கை !
பூமிமு ழுவதும் பூரண மாகிடப்
---புழுங்கிய தாருடைத்தோள் ? - அந்தச்
சாமிம தித்திடும் எந்தொழி லாளரின்
---சாவைம றந்திட்டதோள் !
வண்ணச்செ ழுமைகள் செய்திங்கு நன்னிலம்
---வார்த்தது மார்மதியோ ? - தங்கள்
எண்ணஞ்சி றந்திட என்றுமு ழைத்திடும்
---எம்முழைப் பாளிமதி !
உண்டிடச் சோறுமு டுக்கவு டைகளும்
---ஊரிற்கொ டுப்பதுமார் ? - நன்கு
மண்ணைப்ப தஞ்செய்து மாபெரு மேருழும்
---மனிதரு ழவரன்றோ !
கண்ணிற்கி னியவாம் கட்டிட மாமலை
---காட்சிக்க மைத்ததுமார் - நல்ல
வண்ணமி ழைத்ததில் வார்த்தெழில் கூட்டிடும்
---வன்மைக்க லைஞரன்றோ !
இங்கேயு ழைத்திடும் வர்க்கமு மில்லையேல்
---இன்னுல குண்டாமோ ? - வாழத்
தங்களு ழைப்பினைத் தந்திடு வோரின்றித்
---தாரணி உண்டாமோ ?
என்றுமு ழைப்பவர் கையைப்பி டித்தவர்க்
---கேற்றத்தைக் காட்டிடுவோம் - பின்னர்
அன்னவ ரின்றியிங் கெஃதுமில் லையென
---அன்புடன் சொல்லிடுவோம் !
தன்னைம றந்துநம் வாழ்வினுக் காகாவே
---தானுமு ழைப்பவரை - மண்ணில்
மன்னர்க ளென்றுநாம் நல்லுரை செய்திடில்
---மாதவ மெய்துவமே !
-விவேக்பாரதி