வலியோடு வெற்றி
பத்து மாதங்கள் கருப்பையில் சுமந்த தாய்க்கு
குழந்தை பிறப்பு என்பது பெரும் வெற்றி!
அந்த பெரும் வெற்றி அவளுக்கு
வலியின்றி கிடைப்பதில்லை!
எந்த லட்சியத்திலுமே
வெற்றி
வலியின்றி கிடைப்பதில்லை!
தான் சொல்ல சொல்ல மகாபாரதம் எழுத
வியாசர் விநாயகரை வேண்டியபோது ---
கடும் நிபந்தனையிட்டார் விநாயகர்!
என் எழுத்தாணி நிற்காது!
அதற்கேற்ற வேகம் வேண்டும் உன்னிடம் என்றார்!
சளைத்தாரா வியாசர்!
பொருள் புரியாமல் ஒரு புள்ளி கூடஎழுத்தாணியை நகர்த்த வேண்டாம் என
பதில் நிபந்தனை விதித்தார் !
புரிந்து கொள்ள கிடைக்கும் சிறிது நேர அவகாசத்தில்
இயற்றி இயற்றி சொல்லிக் கொண்டே போனார்!
காலத்தால் அழியாத இதிகாசம் பிறந்தது!
வலியின்றியா வெற்றிக் கனியை வியாசருக்கு தந்தது இதிகாசம்?
ராமாயணத்தை இயற்ற முனைந்த போது
ராம பாத்திரத்தில் கலந்து விட்டார் வால்மீகி!
பாத்திரப் படைப்பு என்பதும் ஒரு பிரசவ வலிதானே?
இந்திய விடுதலை என்பது
எத்தனை வீரர்களின் வலியில் உதயமானது!
திரைப் படத் தயாரிப்பாகட்டும்!
அறிவியல் கண்டுபிடிப்பாகட்டும்!
இசைஞனோ ஓவியனோ எக் கலையின் சாதனையாளனும் ஆகட்டும்!
வலியின்றி வெற்றி பெற்ற சரித்திரம்தான் உண்டோ?
அதர்ம வழியில் பெரும் வெற்றி வலியின்றி கிடைக்கலாம்!
அது நிலையற்ற வெற்றி! சாபங்களையும் அழிவையும் சுமந்து வரும் வெற்றி!
தர்ம வழியில்
முயற்சியிலும் உழைப்பிலும் தவழ்ந்து வரும் வெற்றி
இறைவனின் ஆசி மலர்கள் சுமந்து வரும் வெற்றி!
அந்த வெற்றியில்
வலி என்றதும் துன்பம் எனத் தோன்ற வேண்டாம்!
வலிமை என்று நேர்மறையாய் நினைக்க பழகுவோம்!
ஆம்! வலியோடு வெற்றி பெறுவோம்!