கனவுகள்
கூடப் படித்தவன் என்று
கூற முடியாதவாறு
பள்ளிக்கு மட்டம் போட்டு
சினிமா பாத்து திரிஞ்சவன்
என் பள்ளி நண்பன் சோலைமுத்து !
முழிக்கிற முழி சோ மாதிரி என
அவன் பெரிய கண்களை
பார்த்து நண்பர்கள் இட்ட
பட்டப் பெயர் சோ சோலை !
எள்ளிநகைப்பு அவனில்
வளர்த்ததென்னவோ
சினிமா கனவு !
திருட்டு ரயிலேறி
சென்னையை சுற்றிவிட்டு
ஒன்றிரண்டு மாதங்கள்
கழித்து திரும்பும் போதெல்லாம்
அவன் அளக்கின்ற கதைகள்
பொழுது போக்கானது
நண்பர் குழாமுக்கு !
நாற்பது வருடங்கள் கழிந்து
சென்னை சென்ட்ரலில்
கோவை ரயிலுக்காக
காத்து நின்ற தருணம்..
எண்ணெய் காணாத
பரட்டைத்தலை நரைத்த
தாடிமீசை சகிதம்
நின்றவனை அடையாளம்
தெரியாமல் தயங்கியபோது
நான்தாண்டா சோ சோலை
என முதுகில் தட்டியவன்
அவனது கதையை மீண்டும்
அரங்கேற்ற தொடங்கினான்
தடம் எண் நான்கில்..
இரண்டு மகன்கள்..
ஆட்டோ ஓட்டுகிற
கமல் என்கிற கனகரத்தினம்
பேருந்து கண்டக்டர்
ரஜினி என்கிற ரங்கராசு..
மனைவி சச்சு என்கிற
சற்குணவதிக்கு பாவம்
சக்கரை வியாதியாம்..
எப்படியாவது சினிமாவில்
நடித்துவிட்டேன் என்றவன்
அன்பே சிவத்தில்
ரயில் விபத்தில்
கிடக்கும் பிணங்களில்
ஒன்று நான்தான் என்றான்....