கவிதை தொக்கு 8

புறக்கணித்தலின் நவீனம்....

அவளுக்கு சரியாக செல்பி
எடுக்கத் தெரியவில்லை...
செல்பிக்கு காட்டும் முகத்திலும்
விறைத்து நிற்கிறது பாவனை...
பல படங்கள் ஆடியபடியேதான்
இருக்கின்றன...
ஒளி பற்றிய தெளிவு அறவே
இல்லை...
தனது பருத்த உடலை பற்றிய
ஒளிவு மறைவின்றி
ஒவ்வொரு புகைப் படத்திலும்
மலங்க விழித்துக்
கொண்டிருக்கிறாள்...
முகப்புத்தகம் பற்றிய அறிதல்
சமீபமாகவே அவளுக்கு
வந்திருக்க வேண்டும்..
அதீத ஆர்வத்தில் எல்லாருக்கும்
ஓடி ஓடி லைக்ஸ் போடுகிறாள்....
தப்பும் தவறுமாக கருத்து
சொல்லும் அவளின் மொழி
தமிழின் தூரத்துப் பிழையாகவே
இருக்கிறது...
சரிந்தபடியே எடுத்த புகைப்படத்தில்
முறைத்தபடியே இருக்கும்
அவளுக்கு ஒரு லைக்ஸ் கூட
விழுந்திருக்கவில்லை...
அவளின் புகைப்படத்திற்கு
லைக் செய்ய யாரும் விரும்பாத
பார்வையோடுதான் நானும்
அவளைக் கடக்கிறேன்.....
பின்னிரவு ஒன்றில் ஏதோ
மனதுக்குள்
அறுக்க.....
எனக்கே தெரியாமல் எழுந்து
அவளின் புகைப்படம் ஒன்றுக்கு
ஒரு லைக் போட்டு விட்டு
படுத்துக் கொள்கிறேன்...
புறக்கணித்தலின் நவீனத்தை
உடைத்த விதிக்குள்
எப்போது தூங்கினேன்
என்று தெரியவில்லை....

- கவிஜி

எழுதியவர் : கவிஜி (26-Apr-16, 2:22 pm)
பார்வை : 204

மேலே